உலகம்

டிரம்புக்கு எதிராக போராட்டம்: லாஸ் ஏஞ்சல்சில் கூடுதலாக 2 ஆயிரம் பாதுகாப்பு வீரர்கள் குவிப்பு

Published On 2025-06-10 11:12 IST   |   Update On 2025-06-10 11:12:00 IST
  • மெக்சிகோ மற்றும் தென் அமெரிக்க நாடுகளை சேர்ந்த மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர்.
  • இதையடுத்து கலவரத்தை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

அமெரிக்காவில் சட்ட விரோதமாக குடியேறியவர்களை வெளியேற்றும் நடவடிக்கைகளை அதிபர் டிரம்ப் தீவிரமாக எடுத்து வருகிறார். இதனையொட்டி ஏராளமானோர் கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்பட்டு வருகிறார்கள். இதில் மெக்சிகோவை சேர்ந்தவர்கள் அதிக அளவில் கைது செய்யப்படுகிறார்கள்.

இதற்கிடையே அதிபர் டிரம்பின் நடவடிக்கையை கண்டித்து கலிபோர்னியா மாகாணம் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடந்த போராட்டத்தில் கலவரம் வெடித்தது. இதில் ஏராளமான வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டது. வணிக வளாகங்கள் சூறையாடப்பட்டன.

மெக்சிகோ மற்றும் தென் அமெரிக்க நாடுகளை சேர்ந்த மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர். இதையடுத்து கலவரத்தை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

போராட்டத்தை போலீசாரால் கட்டுப்படுத்த முடியாததால் தேசிய படையை சேர்ந்த 2 ஆயிரம் வீரர்கள் லாஸ் ஏஞ்சல்ஸ் நகருக்கு அனுப்பப்பட்டனர். அவர்கள் நகர் முழுவதும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு போராட்டங்களை ஒடுக்க நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கி சூடு, கண்ணீர் புகை குண்டு வீச்சு உள்ளிட்டவை நடந்து வருகிறது. மேலும் ஏராளமானோரை கைது செய்து வருகிறார்கள். ஆனாலும் கலவரம் கட்டுக்குள் வரவில்லை.

லாஸ் ஏஞ்சல்ஸ் சாலைகளில் தொடர்ந்து போராட் டங்கள் நடந்த வண்ணம் உள்ளது. அவர்களை தேசிய படை வீரர்கள் தடுத்து நிறுத்தி வருகிறார்கள். லாஸ் ஏஞ்சல்சில் 4-வது நாளாக போராட்டங்கள் நடந்து வருகிறது. மேலும் கலவரத்தால் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

இந்த நிலையில் லாஸ் ஏஞ்சல்சில் நடந்து வரும் போராட்டங்கள், கலவரத்தை ஒடுக்க கூடுதலாக தேசிய படையை சேர்ந்த 2 ஆயிரம் வீரர்களை அனுப்ப அதிபர் டிரம்ப் உத்தரவிட்டு உள்ளார்.

இதுதொடர்பாக அதிகாரிகள் கூறும்போது, லாஸ் ஏஞ்சல்சில் போராட் டங்களை தடுக்க கூடுதலாக 2 ஆயிரம் தேசிய காவல் படை வீரர்களை அனுப்ப அதிபர் டிரம்ப் அனுமதி அளித்துள்ளார்.

இந்த வீரர்கள் ஒன்று அல்லது இரண்டு நாட்களில் லாஸ் ஏஞ்சல்சுக்கு செல்வார்கள் என்றனர். இதற்கிடையே தேசிய காவல்படை வீரர்களுக்கு உதவ சுமார் 700 கடற்படை வீரர்கள் லாஸ் ஏஞ்சல்சுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

Tags:    

Similar News