உலகம்

இந்திய தூதரகம் மீது காலிஸ்தான் ஆதரவாளர்கள் தாக்குதல் - அமெரிக்கா கண்டனம்

Published On 2023-03-20 19:03 GMT   |   Update On 2023-03-20 19:03 GMT
  • இந்திய தூதரகம் தாக்கப்பட்டதற்கு அமெரிக்க வெளியுறவுத்துறை கண்டனம் தெரிவித்துள்ளது.
  • பிரிட்டனில் உள்ள இந்திய தூதரகத்தின் மீது காலிஸ்தான் ஆதரவாளர்கள் நேற்று தாக்குதல் நடத்தினர்.

வாஷிங்டன்:

இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த பிரிவினைவாத தலைவரான அம்ரித்பால் சிங் கடந்த இரு தினங்களுக்கு முன் கைது செய்யப்பட்டதாக தகவல் வெளியானது. ஆனால், வாகனத்தில் துரத்திச் சென்றபோது அவர் தப்பிவிட்டதாகவும், அவரை தீவிரமாக தேடி வருவதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அவர் மீதான நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து காலிஸ்தான் ஆதரவாளர்கள் இதுபோன்ற போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதற்கிடையே, அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரில் உள்ள இந்திய தூதரகம் மீது காலிஸ்தான் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தி உள்ளனர். தூதரகத்தின் கதவு, ஜன்னல்களை அடித்து நொறுக்கி சூறையாடினர். அம்ரித்பாலை விடுதலை செய்ய வேண்டும் என கட்டிடத்தின் வெளிப்புறச் சுவரில் பெயிண்டால் எழுதி உள்ளனர். தூதரகத்தை ஒரு கும்பல் தாக்கும்போது பதிவு செய்யப்பட்ட வீடியோக்கள் வெளியாகி உள்ளன.

இந்நிலையில், இந்திய தூதரகம் தாக்கப்பட்டதற்கு அமெரிக்க வெளியுறவுத்துறை கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் கூறுகையில், இந்திய துணைத் தூதரகம் மீதான தாக்குதலையும், அமெரிக்காவிற்குள் உள்ள தூதரக அலுவலகங்கள் மீதான தாக்குதலையும் அமெரிக்கா கண்டிக்கிறது. தூதரகத்தில் பணிபுரியும் அதிகாரிகளை பாதுகாப்போம் என உறுதியளிக்கிறோம் என தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே, பிரிட்டனில் உள்ள இந்திய தூதரகத்தின் மீது காலிஸ்தான் ஆதரவாளர்கள் சிலர் கற்கள் வீசி தாக்குதல் நடத்தினர். ஒரு சிலர் தேசியக் கொடியை கீழே இறக்கி அவமதிப்பு செய்ததற்கு இந்தியா கண்டனம் தெரிவித்தது.

Tags:    

Similar News