காலிஸ்தான் குழுக்கள் உட்பட பயங்கரவாத அமைப்புகளுக்கு கனடாவில் நிதியுதவி - ஒப்புக்கொண்ட அரசு!
- சர்வதேச சீக்கிய இளைஞர் கூட்டமைப்பு (ISYF) போன்ற காலிஸ்தான் பயங்கரவாத குழுக்கள் கனடாவில் நிதி திரட்டுகின்றன.
- பயங்கரவாதம் நாட்டிற்குள்ளேயே ஆதரவைப் பெறுகிறது என்பதை கனடா வெளிப்படையாக ஒப்புக்கொள்வது இதுவே முதல் முறை.
காலிஸ்தான் பிரிவினைவாதிகள் உட்பட பல பயங்கரவாத அமைப்புகள் கனடாவில் நிதி உதவி பெறுவது அம்பலமாகி உள்ளது.
கனடா நிதி அமைச்சகம் 'கனடாவில் பணமோசடி மற்றும் பயங்கரவாத நிதியுதவி மதிப்பீடு-2025' என்ற அறிக்கையை வெளியிட்டுள்ளது.
அதில், "கனடிய குற்றவியல் சட்டத்தில் பட்டியலிடப்பட்டுள்ள ஹமாஸ், ஹிஸ்புல்லா, பாப்பர் கல்சா இன்டர்நேஷனல் மற்றும் சர்வதேச சீக்கிய இளைஞர் கூட்டமைப்பு (ISYF) போன்ற காலிஸ்தான் பயங்கரவாத குழுக்கள் கனடாவில் நிதி திரட்டுவதாக உளவுத்துறை மற்றும் காவல்துறை வட்டாரங்கள் அடையாளம் கண்டுள்ளன' என்று கூறப்பட்டுள்ளது.
கிரிப்டோகரன்சி மற்றும் வங்கிகள் மூலம் இந்த நிதி திரட்டல் நடத்தப்படுகிறது. இந்திய மாநிலமான பஞ்சாபில் ஒரு சுதந்திர அரசை நிறுவுவதற்காக காலிஸ்தான் பயங்கரவாத குழுக்கள் வன்முறையில் ஈடுபட்டு வருவதாக அறிக்கை கூறுகிறது.
மேலும், பயங்கரவாத குழுக்கள் போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட சட்டவிரோத செயல்களுக்கு பெறப்பட்ட நிதியை பயன்படுத்துவதாகவும் அறிக்கை கூறுகிறது.
பயங்கரவாதம் நாட்டிற்குள்ளேயே ஆதரவைப் பெறுகிறது என்பதை கனடா வெளிப்படையாக ஒப்புக்கொள்வது இதுவே முதல் முறை.
முன்னதாக, இந்திய அரசாங்கம் கனேடிய அரசாங்கம் காலிஸ்தானியர்களை ஊக்குவிப்பதாகவும், இந்தியாவைப் பிளவுபடுத்தும் நடவடிக்கைகளுக்கு உதவுவதாகவும் குற்றம் சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.