உலகம்

எரிபொருள் தட்டுப்பாடு பிரச்சினைக்கு உடனே தீர்வு காண முடியாது- ரணில் விக்ரமசிங்கே

Published On 2022-06-30 04:39 GMT   |   Update On 2022-06-30 04:39 GMT
  • வருகிற ஜூலை 22-ந்தேதி தான் பெட்ரோல் தாங்கிய கப்பல் ஒன்று இலங்கை வந்தடைய உள்ளது.
  • எனவே மக்கள் பொறுமை காக்க வேண்டும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்கே தெரிவித்துள்ளார்.

கொழும்பு:

இலங்கையில் பொருளாதார நெருக்கடியால் மக்கள் தவித்து வரும் நிலையில் எரிபொருள் தட்டுப்பாடு அவர்களை மேலும் இன்னலுக்கு உள்ளாக்கி இருக்கிறது.

பற்றாக்குறை காரணமாக தனியார் வாகனங்களுக்கு பெட்ரோல்-டீசல் விற்பனைக்கு வருகிற 10-ந்தேதி வரை தடை விதிக்கப்பட்டுள்ளது. சுகாதாரம், பாதுகாப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பணிகளுக்கு மட்டுமே எரிபொருள் வினியோகிக்கப்படுகிறது.

இதனால் இலங்கையில் வாகன போக்குவரத்து பெருமளவு முடங்கி இருக்கிறது. இந்த நிலையில் எரிபொருள் பிரச்சினைக்கு உடனடியாக தீர்வு காண முடியாது என்று இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறியதாவது,

இலங்கையில் எரிபொருள் பிரச்சினைக்கு உடனடி தீர்வு காணவே முடியாது. அந்தளவுக்கு நிலைமை மிகவும் மோசமடைந்துள்ளது. வருகிற ஜூலை 22-ந்தேதி தான் பெட்ரோல் தாங்கிய கப்பல் ஒன்று இலங்கை வந்தடைய உள்ளது. எனவே மக்கள் பொறுமை காக்க வேண்டும்.

வருகிற 11-ந்தேதி முதல் 15-ந்தேதிக்கு இடைப்பட்ட கால பகுதியில் டீசல் தாங்கிய கப்பல் ஒன்று வருகிறது. இலங்கை பெட்ரோலிய கூட்டமைப்பிடம் 11 ஆயிரம் மெட்ரிக் டன் டீசலே கையிருப்பில் உள்ளது.

5 ஆயிரம் மெட்ரிக் டன்னுக்கு குறைவான பெட்ரோலே கையிருப்பில் உள்ளது. ஆயிரம் மெட்ரிக் டன் டீசல் தாங்கிய கப்பல் 35 ஆயிரத்து 300 மெட்ரிக் டன் பெட்ரோல் தாங்கிய கப்பல் இலங்கைக்கு வர உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News