உலகம்

தைவானில் வினோத வழக்கு- டாக்டரை காயப்படுத்திய கிளியின் உரிமையாளருக்கு ரூ.74 லட்சம் அபராதம்

Update: 2023-02-01 04:29 GMT
  • வழக்கை விசாரித்த நீதிமன்றம் கிளியின் உரிமையாளரான ஹூவாங்கிற்கு 2 மாத சிறை தண்டனையும், 91,350 டாலர் (74 லட்சம்) அபராதமும் விதித்து தீர்ப்பளித்தது.
  • தண்டனையை எதிர்த்து மேல் முறையீடு செய்ய உள்ளதாக ஹூவாங் தெரிவித்தார்.

தைவானை சேர்ந்தவர் ஹூவாங். இவர் தனது வீட்டில் செல்லமாக கிளி ஒன்றை வளர்த்து வந்தார். அந்த கிளி 40 சென்டி மீட்டர் உயரம், 60 சென்டி மீட்டர் இறக்கையுடன் பெரிய அளவில் காணப்பட்டது.

ஹூவாங் சம்பவத்தன்று அந்த கிளியை அப்பகுதியில் உள்ள பூங்காவிற்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு அப்பகுதியை சேர்ந்த பிரபல பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நிபுணரான டாக்டர் லின் நடைபயிற்சி சென்று கொண்டு இருந்தார்.

அப்போது திடீரென ஹவாங்கின் கிளியானது டாக்டர் லின் மீது பறந்து சென்று அவரது முதுகில் அமர்ந்து இறக்கையை பலமுறை அசைத்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த டாக்டர் லின் கீழே விழுந்து படுகாயம் அடைந்தார்.

இந்த சம்பவத்தில் டாக்டரின் இடுப்பு எலும்பும் முறிந்து விழுந்தது. இதனால் அவர் மருத்துவமனையில் தங்கி ஒரு வாரம் சிகிச்சை பெற்றுள்ளார். மேலும் காயம் முழுமையாக குணமடைய 3 மாதங்கள் ஆகியுள்ளது.

இந்த சம்பவத்தால் டாக்டர் லின்னால் தொடர்ந்து 6 மாதங்கள் வேலை செய்ய முடியாத நிலைக்கு தள்ளப்பட்டார்.

இதனால் வருமான ரீதியாக கடுமையாக பாதிக்கப்பட்ட டாக்டர் லின் உரிய நிவாரணம் கேட்டு தைனான் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில் தன்னால் தற்போது நடக்க முடிகிறது. ஆனால் அறுவை சிகிச்சை செய்யும் போது நீண்ட நேரம் நிற்க முடியவில்லை என டாக்டர் லின்னின் வழக்கறிஞர் வாதாடினார்.

வழக்கை விசாரித்த நீதிமன்றம், கிளியின் உரிமையாளரான ஹூவாங்கிற்கு 2 மாத சிறை தண்டனையும், 91,350 டாலர் (74 லட்சம்) அபராதமும் விதித்து தீர்ப்பளித்தது. இந்த தண்டனையை எதிர்த்து மேல் முறையீடு செய்ய உள்ளதாக ஹூவாங் தெரிவித்தார். கடந்த 10 ஆண்டுகளில் தைனான் மாவட்ட நீதிமன்றம் காணாத அறியதொரு வழக்கு என்று கூறப்படுகிறது.

Tags:    

Similar News