உலகம்

இஸ்ரேல் ஏவுகணை தாக்குதலில் 4 சிரியா வீரர்கள் பலி

Published On 2023-08-07 06:41 GMT   |   Update On 2023-08-07 06:41 GMT
  • குடியிருப்புகள் மீதும் இந்த தாக்குதல் நடந்து வருகிறது.
  • தாக்குதல் காரணமாக இஸ்ரேல் மற்றும் சிரியா இடையே நீண்ட நாட்களாக பகை இருந்து வருகிறது.

டமாஸ்கஸ்:

சிரியாவில் ஐ.எஸ்.பயங்கரவாத அமைப்பினர் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். இங்கு மேலும் பல பயங்கரவாத அமைப்புகளும் செயல் பட்டு வருகின்றது.

இந்த குழுக்களை சேர்ந்த பயங்கரவாதிகளை ஒடுக்க சிரியா அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. அதேசமயம் அமெரிக்காவும், இஸ்ரேல் பாதுகாப்பு படையினரும் பயங்கரவாதிகளை குறிவைத்து சிரியாவில் அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகின்றன. குடியிருப்புகள் மீதும் இந்த தாக்குதல் நடந்து வருகிறது.

இதில் தீவிரவாதிகள் மட்டுமல்லாது அப்பாவி பொதுமக்களும் உயிர் இழந்து வருகின்றனர்.

இந்த தாக்குதல் காரணமாக இஸ்ரேல் மற்றும் சிரியா இடையே நீண்ட நாட்களாக பகை இருந்து வருகிறது.

இந்த நிலையில் இன்று அதிகாலை சுமார் 2.30 மணி அளவில் சிரியா தலைநகர் டமாஸ்கஸ் மீது இஸ்ரேல் படையினர் வான் வெளி தாக்குதல் நடத்தினார்கள். சரமாரியாக ஏவுகணை வீசி இந்த தாக்குதல் நடத்தப்பட்டது.

பயங்கரவாத அமைப்பை சேர்ந்தவர்களை குறி வைத்து இந்த தாக்குதல் நடந்ததாக இஸ்ரேல் அறிவித்து உள்ளது. ஆனால் இந்த ஏவுகணை தாக்குதலில் சிரியா படையை சேர்ந்த 4 வீரர்கள் பலியானார்கள். 4 பேர் படுகாயம் அடைந்தனர்.கட்டிடங்களும் சேதம் அடைந்ததாக கூறப்படுகிறது.

இந்தநிலையில் இஸ்ரேல் படையின் ஏவுகணைகளை சுட்டு வீழ்த்தியதாக சிரியா தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News