உலகம்

ஆப்கானிஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.1ஆக பதிவு- 255 பேர் பலி

Published On 2022-06-22 06:09 GMT   |   Update On 2022-06-22 06:09 GMT
  • நிலநடுக்கம் ஏற்பட்டுள்ள பகுதிகளுக்கு மீட்பு படையினர் விரைந்துள்ளனர்.
  • ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நில நடுக்கம் அண்டை நாடான பாகிஸ்தானிலும் உணரப்பட்டது.

ஆப்கானிஸ்தானில் இன்று அதிகாலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. தென்கிழக்கு ஆப்கானிஸ்தானின் பக்திகா மாகாணத்தில் உள்ள கோஸ்ட் நகரில் இருந்து 44 கி.மீ. தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. 51 கி.மீ. ஆழத்தில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது.

இது ரிக்டர் அளவில் 6.1 புள்ளியாக பதிவானது என்று அமெரிக்க நிலநடுக்கவியல் துறை தெரிவித்து இருந்தது. இந்த பயங்கர நில நடுக்கத்தால் வீடுகள் குலுங்கின. அதிகாலையில் தூங்கிக்கொண்டிருந்த மக்கள் நிலநடுக்கத்தை உணர்ந்ததும் அதிர்ச்சி அடைந்தனர். உடனே அவர்கள் வீடுகளை விட்டு வெளியே சாலைகளில் தஞ்சம் அடைந்தனர்.

இந்த நிலையில் சக்தி வாய்ந்த நில நடுக்கத்தில் 255 பேர் உயிரிழந்துள்ளதாக ஆப்கானிஸ்தானின் செய்தி நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது.

ஏராளமான வீடுகள் இடிந்துள்ளதாகவும் அதில் பலர் சிக்கி இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இதையடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டுள்ள பகுதிகளுக்கு மீட்பு படையினர் விரைந்துள்ளனர். மீட்பு குழுவினர் ஹெலிகாப்டர் மூலம் அங்கு சென்றனர். இடிபாடுகளை அகற்றி அதில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணி மும்மரமாக நடந்து வருகிறது.

ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நில நடுக்கம் அண்டை நாடான பாகிஸ்தானிலும் உணரப்பட்டது. பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத், லாகூர், முல்தான், குவெட்டா உள்ளிட்ட பகுதிகளில் நிலநடுக்கம் உணரப்பட்டது. சில வினாடிகள் நீடித்த இந்த நில நடுக்கத்தால் அதிர்ச்சி அடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலையில் தஞ்சம் அடைந்தனர்.

Tags:    

Similar News