இலங்கை பாராளுமன்றத்தில் முன்னாள் அதிபர்களுக்கான சலுகைகள் பறிப்பு மசோதா நிறைவேற்றம்
- முன்னாள் அதிபர்கள், அவர்களின் பென்சன் உரிமையை இழக்கமாட்டார்கள்.
- அரசு மாளிகை, போக்குவரத்து சலுகை போன்றவற்றை இழக்க நேரிடும்.
இலங்கை பாராளுமன்ற தேர்தலின்போது, முன்னாள் அதிபர்களுக்கு வழங்கப்படும் சலுகைகள் பறிக்கப்படும் என தேசிய மக்கள் சக்தி கட்சி வாக்குறுதி அளித்திருந்தது. அதனடிப்படையில் பாராளுமன்றத்தில் அதிபர்களுக்கு அதிகாரமளித்தல் திரும்பப் பெருதல் சட்ட மசோதாவை ஆளும் அரசு தாக்கல் செய்தது. விவாதத்திற்குப் பிறகு வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அப்போது மசோதாவுக்கு ஆதரவாக 151 வாக்குகள் விழுந்தன. ஒரேயொரு வாக்கு மட்டும் எதிராக விழுந்தது.
முன்னாள் அதிபர்களுக்கான அதிகாரத்தை பறிப்பதற்கு, பாராளுமன்றத்தில் முழு மெஜாரிட்டியுடன் சட்டம் நிறைவேற்ற வேண்டும் என்று இலங்கை உச்சநீதிமன்றம் தெரிவித்திருந்தது. அதனடிப்படையில் மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்த மசோதா குறித்து சட்ட அமைச்சர் ஹர்ஷனா நானயக்கரா கூறுகையில் "முன்னாள் அதிபர்கள், அவர்களின் பென்சன் உரிமையை இழக்கமாட்டார்கள். அரசு மாளிகை, போக்குவரத்து சலுகை, செயலக ஊழியர்கள் போன்ற வசதி பறிக்கப்படும்" என்றார்.
இலங்கையில் தற்போது ஐந்து முன்னாள் அதிபர்கள் உயிரோடு உள்ளனர். ஒரு அதிபரின் மனைவி விதவையாக உள்ளார். இதில் 3 பேர் மட்டுமே சலுகைகள் பெற்று வருகின்றனர்.