உலகம்

இஸ்ரேலை தனி நாடாக அங்கீகரிக்க தயக்கம் இல்லை - சவுதி அமைச்சர்

Published On 2024-01-17 12:12 GMT   |   Update On 2024-01-17 12:12 GMT
  • உலக பொருளாதார மன்ற கூட்டம் ஜனவரி 15லிருந்து 19 வரை நடைபெறுகிறது
  • பிராந்திய அமைதி இஸ்ரேலின் அமைதியையும் உள்ளடக்கியது என்றார் ஃபர்ஹான்

ஆண்டுதோறும், சுவிட்சர்லாந்தின் டாவோஸ் (Davos) நகரில் உலக பொருளாதார மன்றத்தின் (World Economic Forum) கூட்டம் நடைபெறும்.

இவ்வருட கூட்டம் ஜனவரி 15லிருந்து 19 வரை நடைபெறுகிறது. இதில் உலக நாடுகளில் இருந்து தொழில் மற்றும் வர்த்தக துறையை சேர்ந்த அரசாங்க மற்றும் தனியார் துறை பிரதிநிதிகள் பங்கு பெறுகின்றனர்.

இதில் சவுதி அரேபியாவின் வெளியுறவுத் துறை அமைச்சர் இளவரசர் ஃபைசல் பின் ஃபர்ஹான் (Prince Faisal bin Farhan) பங்கேற்றார்.

அவரிடம் இஸ்ரேல்-ஹமாஸ் போர் குறித்து கேட்கப்பட்டது.

அப்போது பதிலளித்த அவர் தெரிவித்ததாவது:

பாலஸ்தீனத்திற்கு தனி நாடு அந்தஸ்து தருவதில் இஸ்ரேலுடன் ஒருமித்த கருத்து ஏற்பட்டால், இஸ்ரேலை ஒரு தனி நாடாக ஏற்று கொள்ள சவுதி அரேபியாவிற்கு எந்த தயக்கமும் இல்லை.

பிராந்திய அமைதி என்பது இஸ்ரேலுக்கான அமைதியையும் உள்ளடக்கியது என்பதை நாங்கள் ஏற்று கொள்கிறோம். ஆனால், பாலஸ்தீன மக்களுக்கு தனி நாடு கிடைத்து அவர்கள் அமைதியாக வாழும் சூழல் ஏற்பட்டால்தான் அது சாத்தியமாகும்.

அப்போது இஸ்ரேலை தனி நாடாக ஏற்க சவுதி அரேபியா சம்மதிக்கும்.

தற்போது இஸ்ரேல், பிராந்திய அமைதியையும், பாதுகாப்பையும் ஆபத்தான நிலைக்கு கொண்டு சென்றுள்ளது.

அப்பகுதியில் பாலஸ்தீனத்திற்கும் இஸ்ரேலுக்கும் வளமான எதிர்காலம் உருவாக அமைதிதான் ஒரே வழி. போர் நிறுத்தமே அமைதிக்கான முதல் படி.

அதற்கு நாங்கள் அமெரிக்காவுடன் இணைந்து முயற்சிக்கிறோம்.

இவ்வாறு ஃபைசல் கூறினார்.

பெரும்பாலும் சன்னி பிரிவு இஸ்லாமியர்கள் நிறைந்த சவுதி அரேபியா, அரபு நாடுகளிடையே வலிமை வாய்ந்த நாடாக கருதப்படுகிறது.

கடந்த வருடம், பிராந்திய அமைதி ஏற்படும் வகையில் இஸ்ரேலுடன், சவுதி அரேபியா ஒரு ஒப்பந்தம் செய்ய இருந்தது.

ஆனால், அக்டோபர் 7 அன்று ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலை தொடர்ந்து அமைதிக்கான சூழல் மாறி விட்டது.

Tags:    

Similar News