உலகம்

ரஷியாவில் தொழில்நுட்ப கோளாறால் வயலில் தரையிறங்கிய விமானம்: 167 பேர் உயிர் தப்பினர்

Published On 2023-09-13 04:32 GMT   |   Update On 2023-09-13 04:32 GMT
  • ஓம்ஸ்க் நகர் அருகே சென்ற நிலையில் விமானத்தில் திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது.
  • விமானத்தில் பயணித்தவர்களுக்கு நிவாரணமாக சுமார் ரூ.87 ஆயிரம் வழங்கப்படும் என யூரல் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் தலைமை அதிகாரி அறிவித்தார்.

மாஸ்கோ:

ரஷியாவின் சோச்சி நகரில் இருந்து யூரல் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான ஏர்பஸ் ஏ320 விமானம் புறப்பட்டது. சைபீரியா நாட்டின் ஓம்ஸ்க் நோக்கி சென்ற இந்த விமானத்தில் 6 விமான பணியாளர்கள் உள்பட 167 பேர் பயணம் செய்தனர். ஓம்ஸ்க் நகர் அருகே சென்ற நிலையில் விமானத்தில் திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதனால் அடுத்து வரவுள்ள நோவோசிபிர்ஸ்க் விமான நிலையத்தில் தரையிறங்க விமானி முயற்சி செய்தார்.

ஆனால் போதுமான அளவுக்கு எரிபொருள் இல்லாததால் நோவோசிபிர்ஸ்க் நகரில் உள்ள ஒரு வயலில் விமானத்தை தரையிறக்க முடிவு செய்யப்பட்டது. இதனால் பயணிகள் பெரும் அச்சத்துக்குள்ளாகினர். எனினும் விமானியின் சாமர்த்தியத்தால் அந்த விமானம் பத்திரமாக தரையிறக்கப்பட்டது. இந்த சம்பவத்தில் காயம் அடைந்த 5 பேர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். இதனையடுத்து விமானத்தில் பயணித்தவர்களுக்கு நிவாரணமாக சுமார் ரூ.87 ஆயிரம் வழங்கப்படும் என யூரல் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் தலைமை அதிகாரி செர்ஜி ஸ்குராடோவ் அறிவித்தார்.

Tags:    

Similar News