உலகம்

92 வயதில் 5-வது திருமணம் செய்யும் சர்வதேச ஊடகத்துறை ஜாம்பவான் ருபெர்ட் முர்டாச்

Update: 2023-03-22 02:34 GMT
  • 120-க்கும் அதிகமான பத்திரிகைகளை வெற்றிகரமாக நடத்தி வருகிறார்.
  • இது எனது கடைசி காதலாக இருக்கும் என்று எனக்கு தெரியும்.

வாஷிங்டன் :

சர்வதேச ஊடகத்துறையின் ஜாம்பவானாக ருபெர்ட் முர்டாச் அமெரிக்கா, இங்கிலாந்து உள்பட பல நாடுகளில் சுமார் 120-க்கும் அதிகமான பத்திரிகைகளை வெற்றிகரமாக நடத்தி வருகிறார்.

பல்வேறு தொலைக்காட்சி நிறுவனங்களின் உரிமையாளரான இவர் கடந்த 1956-ம் ஆண்டு விமானப் பணிப்பெண் ஒருவரை மணந்தார். ஆனால், 1967-ம் ஆண்டு இருவரும் விவாகரத்து மூலம் பிரிந்தனர். பின்னர் பத்திரிகையாளர் ஒருவரை திருமணம் செய்துகொண்ட முர்டாச், 1999-ம் ஆண்டு அவரையும் பிரிந்து 3-வதாக சீனாவைச் சேர்ந்த பெண் தொழில் அதிபர் ஒருவரை திருமணம் செய்து கொண்டார்.

அவருடன் 14 ஆண்டுகள் வாழ்ந்து, கடந்த 2013-ம் ஆண்டு அவரையும் பிரிந்தார். அதனைத் தொடர்ந்து 4-வதாக மாடல் மற்றும் நடிகையான ஜெர்ரி ஹாலை 2016-ல் திருமணம் செய்துகொண்ட முர்டாச், கடந்த ஆண்டு அவரையும் விவகாரத்து செய்தார்.

இந்த நிலையில் 92 வயதில் 5-வது முறையாக திருமணம் செய்து கொள்ள உள்ளதாக முர்டாச் அறிவித்துள்ளார். கணவரை இழந்த மூத்த பெண் பத்திரிகையாளரும், மாடல் அழகியுமான 66 வயதான ஆன் லெஸ்லி ஸ்மித்துடன் காதல் வயப்பட்டதாகவும், வருகிற கோடை காலத்தில் அவரை திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் முர்டாச் கூறினார்.

இது குறித்து அவர் தனது சொந்த பத்திரிகைக்கு அளித்த பேட்டியில், "மீண்டும் காதலில் விழ நான் பயந்தேன். ஆனால் இது எனது கடைசி காதலாக இருக்கும் என்று எனக்கு தெரியும். அது சிறப்பாக இருக்கும். நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன்" என்றார்.

Similar News