அதிபர் தேர்தலும் ஆணாதிக்க அமெரிக்காவும்.. கணவர்களுக்கு தெரியாமல் கமலாவுக்கு வாக்களித்த மனைவிகள்..
- 248 ஆண்டுக்கால அமெரிக்க வரலாற்றில் ஒரு பெண் அதிபர் கூட இல்லை
- ஒரு இளம்பெண் பலாத்காரமாகக் கருவுற்றால் அதை கலைக்காமல் சுமக்க வேண்டும் என்று நீங்கள் எதிர்பார்க்கிறீர்களா
உலகமே எதிர்நோக்கும் அமெரிக்க அதிபர் தேர்தல் வாக்குப்பதிவு இந்திய நேரப்படி நேற்று மாலை 5.30 மணிக்கு தொடங்கி இன்று அதிகாலை 5.30 மணிக்கு நிறைவடைந்தது. வாக்குப்பதிவு முடிந்த உடனேயே வாக்குகள் எண்ணும் பணி தொடங்கின. அதன்படி மாகாணங்கள் வாரியாக வெற்றி தோல்விகள் அறிவிக்கப்பட்டு வருகிறன. மொத்தம் உள்ள 538 எலக்டோரல் வாக்குகளில் 270 க்குள் மேல் பெறுபவர்கள் வெற்றி பெறுவர்.
இரு தலைவர்களும் நாடு முழுவதும் பயணித்து தீவிர பிரசாரம் செய்தது அறிந்ததே. பிரபலங்கள் பலரும் தங்கள் ஆதரவை வெளிப்படையாகத் தெரிவித்து பொதுமக்களிடையே தாக்கத்தையும் ஏற்படுத்தினர். தாராளவாதத்தைப் பின்பற்றும் அமெரிக்காவில் ஆணாதிக்க போக்கு இருப்பதும் அரசியலில் அது வெளிப்படையாகக் காணப்படுவதும் உண்டு. 248 ஆண்டுக்கால அமெரிக்க வரலாற்றில் ஒரு பெண் அதிபர் கூட இல்லாதது இதை உறுதிப்படுகிறது.
கமலா ஹாரிஸ் வென்றால் அவரே அமெரிக்காவின் முதல் பெண் அதிபர் என்ற பெருமையைப் பெறுவார். ஆனால் தேர்தல் முடிவுகள் கமலா தோல்வி முகத்தில் இருப்பதையே காட்டுகிறது. இதற்கிடையே சமீபத்தில் வெளியான அரசியல் விளம்பரம் ஒன்று கவனம் பெற்றது. அதே நேரம் சர்ச்சையையும் ஏற்படுத்தியது. அந்த விளம்பரத்தில் கமலா ஹாரிஸ்க்கு வாக்களிக்கும் மனைவிமார்கள் தங்களின் கணவர்களிடம் இருந்து தாங்கள் யாருக்கு வாக்களித்தோம் என்பதை மறைப்பதாகச் சித்தரிக்கப்பட்டது.
இதன்மூலம் இந்த தேர்தலில் பாலின சமத்துவம் முக்கிய பேசுபொருளானது. குறிப்பாக டிரம்ப்புடன் நடந்த விவாதத்தின்போது கமலா கேட்ட கேள்வி அனைவரையும் சிந்திக்க வைத்தது. அதாவது, கருக்கலைப்பு உரிமைக்கு எதிராக பேசி வரும் டிரம்பை பார்த்து கமலா, ஒரு இளம்பெண் பலாத்காரமாகக் கருவுற்றால் அதை கலைக்காமல் சுமக்க வேண்டும் என்று நீங்கள் எதிர்பார்க்கிறீர்களா என்று கேட்டார்.
இதற்கு பதிலளிக்க முடியாமல் டிரம்ப் திணறினார். தற்போது சர்ச்சையை ஏற்படுத்திய அந்த விளம்பரத்தில், டிரம்ப் ஆதரவு கணவன் வாக்களித்து வெளியே வந்ததும் வாக்குச்சாவடிக்குள் நுழையும் பெண், கணவனை பார்க்காமல் சுதந்திரமாகக் கமலாவுக்கு வாக்களிப்பதாகச் சித்தரிக்கப்பட்டுள்ளது. இந்த விளம்பரத்துக்கு பிரபல ஹாலிவுட் நடிகை ஜூலியா ராபர்ட்ஸ் பின்னணி குரல் அளித்திருந்தார்.அவர் கூறியதாவது, பெண்கள் கணவர்களின் அழுத்தம் இல்லாமல் அமெரிக்காவில் வாக்களிக்க முடியும் என்று தெரிவித்தார்.
அதிக சுதந்திரம் கொண்டதாக கருதப்படும் அமெரிக்க சமூகத்தில் மனைவிகள் தாங்கள் ஒரு பெண்ணுக்கு வாக்களித்தோம் என்பதை தங்களின் கணவன்ளுக்கு பயந்து மறைக்க வேண்டிய சூழலே உள்ளதாகவும் இந்த விளம்பரம் பொருளுணர்த்துகிறது .