பெண்ணை "உருளைக்கிழங்கு" என கிண்டல் செய்த முதலாளி - ரூ.29 லட்சம் அபராதம் விதித்த நீதிமன்றம்!
- நேரில் மட்டுமல்லாது வாட்ஸ்அப் மூலமாகவும் "உருளைக்கிழங்கு" என்று மெசேஜ் அனுப்பி அவரைத் துன்புறுத்தியுள்ளார்.
- சுமார் 6 மாத காலம் நீடித்த இந்தத் தொடர் கிண்டல்களால் அவர் நீதிமன்றத்தை நாடினார்.
அயர்லாந்தைச் சேர்ந்த பெர்னாரெட் ஹேய்ஸ் என்ற 55 வயது பெண். இவர் இங்கிலாந்தின் லீட்ஸ் நகரில் உள்ள 'வெஸ்ட் லீட்ஸ் சிவில்ஸ்' என்ற பொறியியல் நிறுவனத்தில் கணக்காளராகப் பணிபுரிந்து வந்தார். அங்கு அந்த நிறுவனத்தின் இயக்குநரான மிக் அட்கின்ஸ், ஹேய்ஸை அவரது இனத்தை வைத்துத் தொடர்ந்து கேலி செய்து வந்துள்ளார்.
அட்கின்ஸ் அடிக்கடி ஹேய்ஸைப் பார்த்து "உருளைக்கிழங்கு" என்றும், அயர்லாந்து மக்களைக் குறிக்கும் "Paddy", "Stupid Paddy" போன்ற சொற்களைப் பயன்படுத்தியும் கிண்டல் செய்துள்ளார். நேரில் மட்டுமல்லாது வாட்ஸ்அப் மூலமாகவும் "உருளைக்கிழங்கு" என்று மெசேஜ் அனுப்பி அவரைத் துன்புறுத்தியுள்ளார்.
சுமார் 6 மாத காலம் நீடித்த இந்தத் தொடர் கிண்டல்களால் அவர் நீதிமன்றத்தை நாடினார். தனக்குத் தூக்கமின்மை, பதற்றம் மற்றும் பீதித் தாக்குதல் ஏற்பட்டதாக ஹேய்ஸ் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
இந்த வழக்கை விசாரித்த பிரிட்டன் தொழிலாளர் தீர்ப்பாயம், "உருளைக்கிழங்கு" என்ற சொல்லை ஒருவரின் பூர்வீகத்தை வைத்து மீண்டும் மீண்டும் பயன்படுத்துவது இன ரீதியான துன்புறுத்தல் என்று தீர்ப்பளித்தது.
முதலாளி அட்கின்ஸ் இது ஒரு "நகைச்சுவை" என்று வாதிட்ட போதிலும், நீதிபதி அதை ஏற்க மறுத்துவிட்டார். பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு அவரது மன உளைச்சல் மற்றும் வருமான இழப்புக்காக ரூ.29 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க அந்த நிறுவனத்திற்கு உத்தரவிடப்பட்டது.