உலகம்

அகமதாபாத் விமான விபத்து: உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பாகிஸ்தான் பிரதமர் இரங்கல்

Published On 2025-06-12 20:45 IST   |   Update On 2025-06-12 20:45:00 IST
  • விமானத்தில் பயணம் செய்த 242 பேரில் ஒருவர் மட்டும் உயிர் தப்பியுள்ளார்.
  • விமான விழுந்த பகுதிகளில் சேதம் அடைந்துள்ள நிலையில், சிலர் உயிரிழந்துள்ளனர்.

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து லண்டன் காட்விக்கிற்கு புறப்பட்ட ஏர் இந்தியா 171 (போயிங் 787-8) விமானம், புறப்பட்ட சில வினாடிகளில் மேகானிநகர் குடியிருப்பு பகுதி அருகே கீழே விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது. கீழே விழுந்த விமானம் மருத்துவமனை ஹாஸ்டலில் பயங்கரமாக மோதியுள்ளது. இதில் ஹாஸ்டலில் பயிற்சி மருத்துவர்கள் சாப்பிடும் இடம் சேதம் அடைந்துள்ளது.

இந்த விமானத்தில் 242 பேர் பயணம் செய்தனர். இரண்டு விமானிகள் உள்பட 12 விமான ஊழியர்கள் இதில் அடங்குவர். விமானத்தில் பயணம் செய்த அனைவரும் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்பட்ட நிலையில், ஒருவர் மட்டும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளார்.

இந்த நிலையில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் மற்றும் அவரது சகோதரர் நவாஸ் ஷெரீப் ஆகியோர் இரங்கல் தெரிவித்த்துள்ளனர்.

ஷெபாஸ் ஷெரீப் தனது இரங்கல் செய்தியில் "இன்று அகமதாபாத் அருகே நடந்த ஏர் இந்தியா விமான விபத்து குறித்து அறிந்ததும் மிகவும் வருத்தமடைந்தேன். இந்த மிகப்பெரிய இழப்பால் துயரமடைந்தவர்களின் குடும்பங்களுக்கு எங்கள் இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம். இந்த துயர சம்பவத்தால் பாதிக்கப்பட்ட அனைவருடனும் எங்கள் எண்ணங்களும் பிரார்த்தனைகளும் உள்ளன" எனத் தெரிவித்துள்ளார்.

நவாஸ் ஷெரீப் "அகமதாபாத்தில் நடந்த துயரமான ஏர் இந்தியா விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த பேரழிவு இழப்பு எல்லைகளைக் கடந்து, நமது பகிரப்பட்ட மனிதநேயத்தை நினைவூட்டுகிறது. பிரதமர் மோடிக்கும் இந்திய மக்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்கள்" எனத் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News