மழை வெள்ளத்தை Blessing என அழைத்த பாகிஸ்தான் அமைச்சர்: தொட்டிகள், கண்டெய்னர்களில் சேமிக்க சொன்ன விசித்திரம்..!
- பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாகாணத்தில் கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது.
- 20 லட்சம் மக்கள் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தியாவின் வடக்கு பகுதிகளான ஜம்மு-காஷ்மீர், இமாச்சல பிரதேசம், உத்தரகாண்ட், டெல்லி போன்ற மாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது. ஜம்மு-காஷ்மீர், இமாச்சல பிரதேசத்தில் மேகவெடிப்பு காரணமாக பேய்மழை கொட்டித் தீர்த்தது.
இதுபோன்று பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாகாணத்திலும் மழை கொட்டித் தீர்த்து வருகிறது. இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாநிலங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில் மழை வெள்ள அபாய சூழ்நிலையை எவ்வாறு கையாள வேண்டும் எனக்கூறியது விசித்திரமாக உள்ளது.
இது தொடர்பாக பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிஃப், செய்தி சேனலுக்கு பேட்டியளிக்கும் போது கூறியதாவது:-
வெள்ள அபாயம் போன்ற சூழ்நிலைக்கு எதிராக போராடும் மக்கள், மழை வெள்ளத்தை வீட்டிற்கு எடுத்துச் செல்ல வேண்டும். தாழ்வான பகுதியில் வாழும் மக்கள் வெள்ளத்தை மழைநீர் வடிகால் கால்வாயில் விடுவதற்குப் பதிலாக கண்டெய்னர், தொட்டிகளில் சேமிக்க வேண்டும். மக்கள் வெள்ளத்தை ஆசீர்வாதமாக (Blessing) பார்த்து, சேமித்து வைக்க வேண்டும்.
10 முதல் 15 வருட பெரிய திட்டங்களை விட, சிறிய அணைகளை கட்ட வேண்டும். சிறிய அணைகள் கட்டும் வேலைகள்தான் உடனடியாக முடிவடையும். நீரை கால்வாயில் விட்டுக்கொண்டிருக்கிறோம். அதை நாம் கட்டாயம் சேமிக்க வேண்டும்.
இவ்வாறு அமைச்சர் கூறினார்.
பஞ்சாப் மாகாணத்தில் 20 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஜூன் 26 முதல் ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரை 854 பேர் மழைக் காரணமாக உயிரிழந்துள்ளனர். 1,100 பேர் காயம் அடைந்துள்ளனர்.
செனாப் ஆற்றில் அபாய கட்டத்தை தாண்டி வெள்ளம் ஓடுகிறது. இன்றைக்குள் முல்தான் மாவட்டத்தை வெள்ளம் சென்றடைந்து, ராவி ஆற்று நீருடன் கலக்க வாய்ப்புள்ளது என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.