உலகில் உள்ளதைவிட பாகிஸ்தானில் வாழும் பயங்கரவாதிகள் எண்ணிக்கை அதிகம்: குலாம் நபி ஆசாத்
- பா.ஜ.க. எம்.பி. பைஜயந்த் ஜெய் பாண்டா தலைமையிலான குழு பஹ்ரைன் வந்தது.
- அங்கு வசிக்கும் இந்திய புலம்பெயர்ந்தோருடன் அந்தக் குழுவினர் கலந்துரையாடினர்.
மனாமா:
பாரதிய ஜனதா கட்சி பாராளுமன்ற உறுப்பினர் பைஜயந்த் ஜெய் பாண்டா தலைமையிலான அனைத்துக் கட்சிக் குழு பஹ்ரைனுக்கு வந்துள்ளது. அந்தக் குழுவினர் அங்கு வசிக்கும் இந்திய புலம்பெயர்ந்தோருடன் கலந்துரையாடினர்.
அதன்பின், குழுவில் இடம்பெற்ற ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல் மந்திரியும், ஜனநாயக முற்போக்கு ஆசாத் கட்சியின் தலைவருமான குலாம் நபி ஆசாத் கூறியதாவது:
பஹ்ரைனில் உள்ள இந்திய தூதரகத்திற்குச் சென்று மகாத்மா காந்திக்கு மலர் அஞ்சலி செலுத்தினேன். அங்குள்ள இந்திய சமூகத்தின் பிரதிநிதிகளிடம் உரையாற்றினேன்.
எல்லை தாண்டிய பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் ஒன்றுபட்ட மற்றும் அசைக்க முடியாத நிலைப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தினேன்.
பஹ்ரைன் ஒரு மினி இந்தியா போல இருப்பதைக் கண்டு நான் மகிழ்ச்சி அடைகிறேன். எல்லா மதத்தினரும் இங்கு வாழ்கின்றனர். எந்தக் கட்டுப்பாடுகளும் இல்லை.
எங்கள் அரசியல் நோக்கத்தைப் பொறுத்தவரை நாங்கள் இந்தியாவில் வெவ்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம். ஆனால் இங்கே நாங்கள் இந்தியர்களாக வருகிறோம்.
பாகிஸ்தான் மதத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது. இருப்பினும், கிழக்கு பாகிஸ்தான் (வங்காளதேசம்) மற்றும் மேற்கு பாகிஸ்தான் ஒற்றுமையாக இருக்க முடியவில்லை. ஆனால் நம் நாட்டில், அனைத்து மதங்களைச் சேர்ந்த மக்களும் ஒற்றுமையாக இருக்கிறார்கள். நாங்கள் அமைதியுடனும் நல்லிணக்கத்துடனும் வாழ்கிறோம்.
உலகம் முழுவதும் வசிக்கும் பயங்கரவாதிகளின் எண்ணிக்கையை விட பாகிஸ்தானில் வாழும் பயங்கரவாதிகளின் எண்ணிக்கை அதிகமாக இருக்கலாம் என தெரிவித்தார்.