உலகம்

தென்கொரியா- அமெரிக்காவுக்கு பதிலடி கொடுக்க தயாரான வடகொரியா

Published On 2023-09-08 06:57 GMT   |   Update On 2023-09-08 06:57 GMT
  • அணு ஆயுதங்கள் தாங்கிய இந்த நீர்மூழ்கி கப்பல் கொரியா தீப கற்பம் மற்றும் ஜப்பானுக்கு இடையே உள்ள கடற்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபடும்.
  • என்னென்ன அணு ஆயுதங்கள் இந்த கப்பலில் உள்ளன என்பது தொடர்பான விவரங்கள் எதையும் வடகொரியா தெரிவிக்கவில்லை.

சியோல்:

வடகொரியா- தென் கொரியா இடையே நீண்ட காலமாக பிரச்சினை இருந்து வருகிறது. தென்கொரியாவுடன் இணைந்து அமெரிக்க படையினர் கொரியா தீபகற்ப பகுதிகளில் கூட்டு பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் வடகொரியா கடந்த ஒரு ஆண்டுக்கு மேலாக கண்டம் விட்டு கண்டம் பாயும் பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவி சோதனை நடத்தி வருகிறது. உலக நாடுகள் எதிர்ப்பை மீறி வடகொரியா இந்த சோதனையில் ஈடுபட்டு வருகிறது. 'இந்த நிலையில் வடகொரியா தனது கடற்படையை பலப்படுத்தும் விதமாக முதல் முறையாக அணுசக்தி தாக்குதல் நடத்தும் நவீன நீர்மூழ்கி கப்பலை தயாரித்து உள்ளது.

இந்த நீர்மூழ்கி கப்பல் தற்போது பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டு உள்ளது. இதனை வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் தொடங்கி வைத்து பார்வையிட்டார். அணு ஆயுதங்கள் தாங்கிய இந்த நீர்மூழ்கி கப்பல் கொரியா தீப கற்பம் மற்றும் ஜப்பானுக்கு இடையே உள்ள கடற்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபடும்.

பல மணி நேரம் நீரில் மூழ்கியபடி பயணம் செய்யும் வகையில் இக்கப்பல் வடிவமைக்கப்பட்டு உள்ளது. இதில் இருந்து அணுஆயுத தாக்குதல் நடத்தலாம். என்னென்ன அணு ஆயுதங்கள் இந்த கப்பலில் உள்ளன என்பது தொடர்பான விவரங்கள் எதையும் வடகொரியா தெரிவிக்கவில்லை.

இதன் தொடர்ச்சியாக தற்போது கடற்படையில் உள்ள நீர்மூழ்கி கப்பல்களை அணு ஆயுதம் தாங்கிய நீர் மூழ்கி கப்பலாக மாற்ற வடகொரியா முடிவு செய்துள்ளது. வடகொரியாவின் இந்த நடவடிக்கை கொரிய தீபகற்ப பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News