உலகம்

திருமண விருந்தில் தீ விபத்து; 100க்கும் மேற்பட்டோர் பலி: ஈராக்கில் சோகம்

Published On 2023-09-27 06:57 GMT   |   Update On 2023-09-27 10:38 GMT
  • தீ விபத்து வேகமாக பரவி வெளிப்பட்ட புகையால் மூச்சு திணறலில் பலர் உயிரிழந்தனர்
  • நினெவே மற்றும் குர்திஸ்தான் மருத்துவமனைகளில் பலர் சிகிச்சை பெற்று வருகின்றனர்

மத்திய கிழக்கு அரபு நாடுகளில் ஒன்றான ஈராக்கின் வடக்கே உள்ளது நினெவே (Nineveh) பிராந்தியம். இங்குள்ள ஹம்தனியா (Hamdaniyah) மாவட்டத்தில், அல்-ஹைதம் கூடம் (al-Haitham Hall) எனும் பெரிய திருமண மண்டபத்தில் நேற்று மாலை ஒரு திருமண விருந்து நிகழ்ச்சி நடைபெற்றது.

நேற்று முன்னிரவு சுமார் 10:45 மணியளவில் அங்கு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில் விருந்தில் கலந்து கொள்ள வந்த பெரியவர்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட அனைவரும் அலறியடித்து கொண்டு ஓடினர். தீ விபத்தினால் ஏற்பட்ட புகையில் பலருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது.

தீயணைப்பு அதிகாரிகளுக்கு தகவல் அளிக்கப்பட்டு அவர்கள் வருவதற்குள் தீ மளமளவென பரவியதால் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர்.

மூச்சு திணறல், பலமான தீக்காயங்கள் உட்பட்ட காரணங்களால் தற்போது வரை 113 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 150க்கும் மேற்பட்டோருக்கு தீக்காயங்கள் ஏற்பட்டு அவர்கள் அனைவரும் நினெவே மற்றும் குர்திஸ்தான் பகுதி மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். இன்னமும் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என நினெவே பிராந்திய கவர்னர் நஜிம் அல்-ஜுபோரி தெரிவித்துள்ளார்.

முதற்கட்ட விசாரணையில் விருந்து நிகழ்ச்சியின் போது நடைபெற்ற கொண்டாட்டத்தில் சிலர் பட்டாசுகளை கொளுத்தியதாகவும், அதனால் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் எனவும் தெரிகிறது. இருந்தாலும், இது தற்போது வரை உறுதிபடுத்தபடவில்லை. தீயணைப்புக்கான உபகரணங்கள் அந்த அரங்கில் முறையானபடி இல்லாததால், தீ பரவுதலை தடுக்க முடியாமல் போனதாக தெரிகிறது.

இதையடுத்து, அந்த திருமண அரங்கத்தின் உரிமையாளரை கைது செய்து விசாரிக்கும் நடவடிக்கையில் காவல் அதிகாரிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

மகிழ்ச்சியான திருமண கொண்டாட்டம் விபத்தில் முடிந்தது, அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News