உலகம்

இத்தாலி அருகே அகதிகள் படகு கவிழ்ந்து விபத்து - 26 பேர் உயிரிழப்பு

Published On 2025-08-14 03:45 IST   |   Update On 2025-08-14 03:45:00 IST
  • ஒரு படகில் நீர் கசியத் தொடங்கியதால், அனைவரும் மற்றொரு படகிற்கு மாறியுள்ளனர்.
  • மத்தியதரைக் கடலைக் கடக்க முயன்றதில் இதுவரை 675 பேர் உயிரிழந்துள்ளனர்.

இத்தாலியின் தெற்குப் பகுதியில் உள்ள லம்பேடுசா தீவுக்கு அருகே அகதிகள் சென்ற படகு கவிழ்ந்ததில் குறைந்தது 26 பேர் உயிரிழந்தனர்.

மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால், பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என கடலோர காவல்படை தெரிவித்துள்ளது.

லிபியாவில் இருந்து இரண்டு படகுகளில் அகதிகள் பயணித்துள்ளனர். ஒரு படகில் நீர் கசியத் தொடங்கியதால், அனைவரும் மற்றொரு படகிற்கு மாறியுள்ளனர்.

ஆனால், அந்தப் படகு கடல் சீற்றம் காரணமாக கவிழ்ந்து விபத்து ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இத்தாலிய கடலோர காவல்படையினர் ஐந்து கப்பல்கள், இரண்டு விமானங்கள் மற்றும் ஒரு ஹெலிகாப்டர் மூலம் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

ஐ.நா. அகதிகள் முகமையின் (UNHCR) தகவல்படி, படகில் சுமார் 92 முதல் 97 பேர் இருந்ததாகக் கூறப்படுகிறது. இதுவரை 60 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

இந்த ஆண்டு மத்தியதரைக் கடலைக் கடக்க முயன்றதில் இதுவரை 675 பேர் உயிரிழந்துள்ளதாக UNHCR-ன் இத்தாலிய செய்தித் தொடர்பாளர் பிலிப்போ உங்காறோ தெரிவித்தார். 

Tags:    

Similar News