உலகம்

எரிமலை சீற்றத்தால் என்றும் வீடு திரும்ப முடியாத மக்கள்

Published On 2024-02-04 06:56 GMT   |   Update On 2024-02-04 06:56 GMT
  • நெருப்பு மற்றும் பனியால் ஆன நாடு என ஐஸ்லாந்து அழைக்கப்படுகிறது
  • தொலைக்காட்சியில், 3 வீடுகளை லாவா மூழ்கடித்த காட்சிகளை கண்டு மக்கள் அதிர்ந்தனர்

வட ஐரோப்பாவில் உள்ள தீவு நாடு, ஐஸ்லாந்து. இதன் தலைநகரம் ரெக்ஜெவிக் (Reykjavik).

பனிப்பாறைகளாலும், எரிமலைகளாலும் சூழப்பட்டுள்ளதால், நெருப்பு மற்றும் பனியால் ஆன நாடு (Land of fire and ice) எனவும் ஐஸ்லாந்து அழைக்கப்படுவதுண்டு.

ஐஸ்லாந்து நாட்டு மக்களின் வாழ்க்கைமுறையில், எரிமலைகளிலிருந்து "லாவா" (lava) எனப்படும் எரிமலை குழம்புகள் வெளிக்கிளம்புவதும், அவற்றின் சீற்றம் குறைந்த பிறகு ஊரை சுத்தப்படுத்தி மீண்டும் குடியேறுவதும் வழக்கமான ஒன்று.

சில தினங்களுக்கு முன், இந்நாட்டின் க்ரிண்டாவிக் (Grindavik) பகுதியில் எரிமலைக்குழம்பு பெருக்கெடுத்து ஓடத் தொடங்கியது.


இதையடுத்து, அப்பகுதியில் வாழ்ந்த சுமார் 3800 பேர், தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி விட்டனர்.

இம்முறை க்ரிண்டாவிக் பகுதியில் எரிமலை குழம்பு மொத்த ஊரையும் நாசம் செய்து விட்டதால், மீண்டும் அங்கு குடியேற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

நகரின் பல இடங்களில் நீண்ட தூரத்திற்கு பூமியில் பிளவு ஏற்பட்டு அதிலிருந்தும் லாவா வெளியேறியது.

க்ரிண்டாவிக் பகுதிக்கு அருகே உள்ள ஸ்வார்ட்ஸெங்கி புவிவெப்ப மின் நிலையத்திற்கு (geothermal power plant) உள்ளே லாவா செல்வதை தடுக்கும் வகையில், அதற்கு வெளியே அரசு, தடுப்புகள் அமைத்துள்ளது.

இந்நகரின் 3 வீடுகளை லாவா மூழ்கடித்த காட்சிகளை தொலைக்காட்சியில் கண்ட மக்கள் அதிர்ச்சியடைந்தனர்.

இயற்கையின் சீற்றத்தால் வீடுகளை விட்டு வெளியேறி மீண்டும் குடிபுக முடியாத நிலையில் உள்ள மக்களில் பலருக்கு வீடுகளின் பேரில் வங்கி கடன் உள்ளதால், தங்கள் வாழ்வாதாரம் என்ன ஆகுமோ எனும் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.

Tags:    

Similar News