உலகம்

கென்யா முன்னாள் பிரதமர் இறுதிச்சடங்கில் கண்ணீர் புகைகுண்டு வீச்சு: 3 பேர் பலி

Published On 2025-10-18 04:47 IST   |   Update On 2025-10-18 04:47:00 IST
  • கென்யாவின் முன்னாள் பிரதமர் ரைலா ஒடிங்கா இறுதிச்சடங்கு நடந்தது.
  • அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலைக் கலைக்க போலீசார் கண்ணீர் புகைகுண்டு வீசினர்.

நைரோபி:

கிழக்கு ஆப்பிரிக்க நாடான கென்யாவில் 2008 முதல் 2013-ம் ஆண்டு வரை பிரதமராக இருந்தவர் ரைலா ஒடிங்கா (80). உடல்நலக் குறைவால் அவதிப்பட்ட அவர் ஆயுர்வேத சிகிச்சைக்காக இந்தியாவுக்கு வந்திருந்தார்.

கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் உள்ள மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அங்கு நடைபயிற்சி மேற்கொண்டபோது திடீரென மயங்கி விழுந்தார். டாக்டர்கள் பரிசோதனை செய்தபோது அவர் மாரடைப்பால் இறந்தது உறுதியானது.

அவரது மறைவுக்கு இந்திய பிரதமர் மோடி மற்றும் உலக நாடுகளின் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்தனர். ஒடிங்காவின் மறைவு 7 நாட்கள் துக்க தினமாக அனுசரிக்கப்படும் என அந்நாட்டின் அதிபர் வில்லியம் ரூட்டோ அறிவித்தார். இதையடுத்து அவரது உடல் விமானம் மூலம் தாய் நாட்டுக்கு கொண்டு செல்லப்பட்டது.

அவருக்கு அஞ்சலி செலுத்துவதற்காக நைரோபி விமான நிலையம் அருகே ஆயிரக்கணக்கானோர் காத்திருந்தனர். தடை செய்யப்பட்ட பகுதிக்குள் நுழைய அவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டதால் நைரோபி விமான நிலையம் மக்கள் கூட்டத்தால் ஸ்தம்பித்தது.

எனவே சில மணி நேரம் கழித்தே விமானங்கள் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றன. இதனால் பயணிகள் கடும் அவதியடைந்தனர். இதனையடுத்து பாராளுமன்ற வளாகத்தில் அவருக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது.

ஆனால் கூட்ட நெரிசல் காரணமாக பின்னர் மோய் கால்பந்து மைதானத்துக்கு அவரது உடல் கொண்டு செல்லப்பட்டது. அங்கு அரசியல் தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் கூடியிருந்தனர்.

அப்போது அங்கு திரண்டிருந்த மக்கள் தடுப்புச் சுவரை மீறி உள்ளே நுழைய முயன்றனர். அவர்களைக் கட்டுப்படுத்த முயன்றபோது போலீசாருக்கும், பொதுமக்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

எனவே பொதுமக்களை விரட்டியடிப்பதற்காக போலீசார் கண்ணீர் புகைகுண்டு வீசினர். இதனால் மக்கள் அங்கும், இங்குமாக ஓட்டம் பிடித்தனர். இந்தக் கூட்ட நெரிசலில் சிக்கி 3 பேர் பரிதாபமாக இறந்தனர். மேலும் பலர் படுகாயம் அடைந்தனர். இச்சம்பவம் கென்யாவில் மேலும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News