உலகம்

லெபனான் தலைநகர் பெய்ரூட் மீது தாக்குதல் நடத்திய இஸ்ரேல்

Published On 2025-03-28 20:17 IST   |   Update On 2025-03-28 20:17:00 IST
  • இஸ்ரேல் வடக்குப் பகுதியில் ஹிஸ்புல்லா தாக்குதல் நடத்தியதா இஸ்ரேல் தெரிவித்திருந்தது.
  • இதற்குப் பதிலடியாக இன்று பெய்ரூட் புறநகர் பகுதி மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது.

இஸ்ரேல்- லெபனான் இடையே கடந்த ஆண்டு நவம்பர் மாதம் போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டது. தற்போது இந்த ஒப்பந்தம் முடிவடைந்த நிலையில் முதன்முறையாக லெபனான் தலைநகர் பெய்ரூட் மீது இஸ்ரேல் வான்தாக்குதல் நடத்தியுள்ளது.

மிகப்பெரிய அளவில் வெடிகுண்டு சத்தம் கேட்டதாகவும், மிகப்பெரிய அளவில் புகை மண்டலம் வெளிப்பட்டதாகவும் நேரில் பார்த்த பத்திரிகை நிருபர்கள் தெரிவித்துள்ளனர்.

ஹிஸ்புல்லா ஆதிக்கம் செலுத்தி வரும் தஹியே பகுதியில் ஹிஸ்புல்லா டிரோன்களை மறைத்து வைத்திருந்த இடத்தை குறிவைத்து தாக்கியதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.

வடக்கு இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லா தாக்குதல் நடத்தியதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், பெய்ரூட் புறநகர்ப் பகுதியில் உள்ள மக்கள் உடனடியாக வெளியேறும்படி இஸ்ரேல் எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில், இந்த தாக்குதலை நடத்தியுள்ளது.

இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் "இஸ்ரேல் வடக்குப் பகுதியில் அமைதி இல்லாதவரை, பெய்ரூட்டிற்கும் அமைதி இல்லை" எனத் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேல் வடக்குப்பதியில் நாங்கள் தாக்குதல் நடத்தவில்லை என ஹிஸ்புல்லா தெரிவித்து, லெபனானை தாக்குவதற்கு ஒரு சாக்குப்போக்கை தேடுகிறது என இஸ்ரேல் மீது குற்றம்சாட்டியுள்ளது.

லெபனான் பகுதியில் இருந்து இஸ்ரேல் ராணுவம் ஜனவரி மாதம் இறுதிக்குள் வெளியேற வேண்டும் என ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. பின்னர் காலக்கெடு பிப்ரவரி 18ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. வடக்கு இஸ்ரேலில் இருந்து லெபனான் பகுதி வரை ஐந்து இடங்களில் இஸ்ரேல் ராணுவம் தொடர்ந்து நிலை கொண்டுள்ளது.

இஸ்ரேல்- காசா இடையிலான போர் நிறுத்தம் பிப்ரவரி 2-வது வாரத்திற்குப் பிறகு நீட்டிக்கப்படாத நிலையில் காசா மீது இஸ்ரேல் வான்தாக்குதல் நடத்தியது. இதில் 100-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். அதன்பின் ஹிஸ்புல்லா- இஸ்ரேல் இடையே தாக்குதல் தொடங்கியுள்ளது.

Tags:    

Similar News