இஸ்ரேல்-ஹமாஸ் போர் லைவ் அப்டேட்ஸ்: காசாவில் உள்ள ஹமாஸ் தலைவரை கண்டுபிடித்து ஒழிப்போம்: இஸ்ரேல்
இஸ்ரேலில் ஹமாஸ் அமைப்பினர் நடத்திய தாக்குதலில் 10 நேபாள மாணவர்கள் உயிரிழந்துள்ளதாக இஸ்ரேலில் உள்ள நேபாள தூதரக அதிகாரி தெரிவித்துள்ளார். நேபாள மாணவர்கள் பலர் படித்துக்கொண்டே இஸ்ரேலில் வேலை செய்து வருகின்றனர். இந்த சூழ்நிலையில், இஸ்ரேலிய நகரங்கள் மீது ஹமாஸ் அமைப்பு நடத்திய ராக்கெட் தாக்குதலில் நேபாள மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஹமாஸ் தாக்குதலால் உயிரிழந்த இஸ்ரேலியர்களின் எண்ணிக்கை 600ஐ தாண்டியுள்ளது. 2000க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். பலி எண்ணிக்கை மேலும் உயர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
இஸ்ரேலில் உள்ள குடியிருப்புகளைக் கைப்பற்றிய ஹமாஸ் பயங்கரவாதிகளால் இஸ்ரேலிய குடும்பம் பிணைக் கைதிகளாகப் பிடிக்கப்பட்டுள்ளது. துப்பாக்கி, குண்டு சத்தங்களுக்கு மத்தியில் இந்த குடும்பம் பயத்தில் உறைந்திருக்கும் இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
இஸ்ரேல் மீது மெகா தாக்குதலைத் நடத்த ஹமாஸ் அக்டோபர் 6ம் தேதியை தேர்ந்தெடுத்தது ஏன் ?
இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தப்படுவது இது முதல்முறை இல்லை. ஏனென்றால் இந்த தாக்குதலை ஹமாஸ் படையினர் அக்டோபர் 6, 1973ம் ஆண்டு யோம் கிப்பூர் நாளன்று நடத்தியுள்ளனர். யோம் கிப்பூர் என்பது யூத மதத்தில் மிகவும் புனிதமான நாளாகும்.
இந்த யோம் கிப்பூர் தினத்தன்று யூதர்கள் விரதம் இருந்து இறைவழிபாடு செய்வார்கள். சரியாக இந்த நாளை குறிவைத்து ஹமாஸ் படையினர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
ஹமாஸ் பயங்கரவாத ஆக்கிரமிப்பில் இன்னும் 8 பகுதிகள் இருப்பதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. காசாவில் 426 இடங்களை குறிவைத்து போர் விமானங்கள் தாக்குதல் நடத்தி வருகின்றன. அனைத்து பகுதிகளும் முழுக் கட்டுப்பாட்டில் வரும் வரை ஹமாஸுக்கு எதிரான போர் தொடரும் எனவும் இஸ்ரேல் ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேலில் போருக்கு மத்தியில் மேகாலயா எம்.பி., வான்விரோய் கர்லூகி சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜெருசலேமுக்கு மேகாலயா எம்.பி., வான்விரோய் கர்லூகி தனது குடும்பத்துடன் புனித யாத்திரை சென்றார். இந்நிலையில், போர் பகுதி அருகே சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும், மேகாலயா முதல்வர் கான்ராட் சங்மா வெளியுறவுத் துறை அமைச்சகத்துடன் தொடர்பில் இருப்பதாகவும், வான்விரோய் கர்லூகி பாதுகாப்பாக நாடு திரும்ப வழிவகை செய்வதாகவும் கூறப்பட்டுள்ளது.
காசாவில் 400 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளதாகவும், இன்னும் 20க்கும் மேற்பட்டோர் சிறைபிடிக்கப்பட்டுள்ளனர் என்றும் இஸ்ரேல் பாதுகாப்புப் படைகளின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
ஹமாஸ் தாக்குதலில் 30 அதிகாரிகள் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் காவல்துறை உறுதி செய்துள்ளது.
இஸ்ரேலில் பயங்கரவாத அமைப்பினரின் கொடூரமான தாக்குதலுக்குப் பிறகு, காசா எல்லைப் பகுதியில் இஸ்ரேலிய போர் விமானங்கள் தொடர்ந்து தாக்கி வரும் நிலையில், எல்லைக் காவல்துறை உட்பட அதன் அதிகாரிகள் 30 பேர் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் காவல்துறை இன்று உறுதிப்படுத்தியுள்ளது.
பயணிகளின் நலனைக் கருதி டெல் அவிவ் நகருக்குச் செல்லும் விமான சேவை அக்டோபர் 14-ம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக ஏர் இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது.
போர் பதற்றம் உள்ளதால் ஜெருசலேம் புனித பயணம் மேற்கொள்ளக் கூடியவர்கள் அந்தப் பயணத்தை தவிர்ப்பது நல்லது என வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அறிவுறுத்தி உள்ளது.