இஸ்ரேல்-ஹமாஸ் போர் லைவ் அப்டேட்ஸ்: காசாவில் உள்ள ஹமாஸ் தலைவரை கண்டுபிடித்து ஒழிப்போம்: இஸ்ரேல்
சில வாரங்களுக்கு முன் அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே பரஸ்பரம் கைதிகளை பரிமாறிக் கொள்ளும் உடன்படிக்கைபடி ஈரானிற்கு அமெரிக்கா 6 பில்லியன் டாலர் வழங்கியிருந்தது.
இந்நிலையில், தற்போதைய ஜோ பைடன் அரசாங்கத்தால் அமெரிக்க மக்களின் வரிப்பணம் ஹமாஸ் அமைப்பிற்கு மறைமுகமாக வழங்கப்பட்டிருக்கிறது. ஈரானுக்கு அமெரிக்கா வழங்கிய தொகை ஹமாஸ் அமைப்பிற்கு சென்றிருக்கிறது என முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் குற்றம் சாட்டியுள்ளார்.
வடக்கு இஸ்ரேலில் லெபனான் தாக்குதல் நடத்தி உள்ளது. சிரியாவின் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பான கோலன் குன்றுகள் மீதுள்ள 3 இஸ்ரேல் நிலைகள் மீது ஹிஸ்புல்லா இயக்கம் ஏவுகணைகள் மற்றும் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியது.
காசா முனையில் உள்ள ஹமாஸ் அமைப்பின் உளவுப்பிரிவு தலைவர் வீட்டை இஸ்ரேல் விமானப்படை தாக்கி அழித்துள்ளது. இந்த வீடு ஹமாஸ் அமைப்பின் ஆயுத கட்டமைப்பாக செயல்பட்டதாக இஸ்ரேல் பாதுகாப்புப்படை தெரிவித்துள்ளது.
காசாவுக்கு வழங்கப்படும் குடிநீர், எரிபொருள், அத்தியாவசிய பொருட்கள் இணைப்பை இஸ்ரேல் துண்டித்துள்ளது. மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதால் நேற்று இரவு முழுவதும் காசா நகரம் இருளில் மூழ்கியது.
இஸ்ரேலின் தெற்கு நகரமான ஒபாகிமில் ஹமாஸ் அமைப்பினர், இஸ்ரேல் மக்கள் சிலரை பிணைக் கைதிகளாக பிடித்தனர். அங்கு இஸ்ரேல் ராணுவத்தினர் அதிரடி தாக்குதல் நடத்தி பிணைக்கைதிகளை மீட்டனர். அங்கு நடந்த சண்டையில் ஹமாஸ் அமைப்பினர் சுட்டுக் கொல்லப்பட்டதாக ராணுவம் தெரிவித்துள்ளது.
இஸ்ரேலில் நாங்கள் பாதுகாப்பாக இருக்கிறோம் என தமிழக மாணவர் மணிகண்டன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், நாங்கள் பாதுகாப்பாகத்தான் இருக்கிறோம். அரசு முழு உதவிகளையும் செய்கிறது. தேவையில்லாமல் வெளியில் செல்ல வேண்டாம் என்று அறிவித்துள்ளனர் என்றார்.
கடந்த 8 ஆண்டாக செவிலியராக பணிபுரியும் கேரளாவை சேர்ந்த ஷைனிபாபு கூறுகையில், தெற்கு இஸ்ரேல் வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ளது. மருத்துவமனையில் செவிலியர்களாகவும், தனியாக வசிக்கும் முதியோர்களுக்கு பராமரிப்பாளர்களாகவும் கேரள மக்கள் செயல்பட்டு வருகின்றனர். போரினால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள அவர்கள் பாதுகாப்பு நடவடிக்கையாக இஸ்ரேலில் உள்ள பதுங்கு குழிகளுக்கு இடம் பெயர்ந்துள்ளனர் என தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல் மீதான ஹமாஸ் படையின் தாக்குதலுக்கு இந்தியா உள்பட பல்வேறு நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. இந்நிலையில், நேபாள பிரதமர் புஷ்ப கமல் தஹல் இஸ்ரேல் மீதான ஹமாஸ் படையின் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஹமாஸ் பயங்கரவாதிகள் பதுங்கியுள்ள பகுதிகள் அழிக்கப்படும் என்பதால் காசாவில் இருந்து பொதுமக்கள் வெளியேறும்படி இஸ்ரேல் அதிபர் பெஞ்சமின் நேதன்யாகு தெரிவித்துள்ளார்.