இஸ்ரேல்-ஹமாஸ் போர் லைவ் அப்டேட்ஸ்: காசாவில் உள்ள ஹமாஸ் தலைவரை கண்டுபிடித்து ஒழிப்போம்: இஸ்ரேல்
ஹமாஸ் அமைப்பின் மூத்த கமாண்டர், தங்களது வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டார் என இஸ்ரேல் விமானப் படை தெரிவித்துள்ளது. கொல்லப்பட்ட ஹமாஸ் கமாண்டரின் பெயர் மெராத் அபு மெராட் என அறிவித்துள்ளது.
தற்போது காசாவில் 120-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஹமாஸ் அமைப்பால் சிறை பிடிக்கப்பட்டு உள்ளனர் என்பதை இஸ்ரேல் பாதுகாப்பு படை உறுதிபடுத்தி உள்ளது.
இஸ்ரேல் எச்சரிக்கை விடுத்த நிலையில், காசாவில் இருந்து 4 லட்சம் பாலஸ்தீனர்கள் இடம்பெயர்ந்துள்ளனர் என ஐக்கிய நாடுகள் சபை அலுவலகம் தெரிவித்துள்ளது.
ஹமாஸ் பயங்கரவாதிகளால் கடத்திச் செல்லப்பட்ட இஸ்ரேலியர்களில் சிலரின் உடல் காசா முனையில் இருந்து மீட்கப்பட்டுள்ளது. காசாவுக்குள் புகுந்து இஸ்ரேல் நடத்திய சோதனையில் பிணைக்கைதிகளாக பிடித்துச் செல்லப்பட்டவர்களின் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டது.
பாலஸ்தீன மக்களை வெளியேற விடாமல் ஹமாஸ் தடுத்து வருகிறது என இஸ்ரேல் ராணுவம் குற்றம்சாட்டியுள்ளது. மேலும், போரால் சாமானிய மக்கள் பாதிக்கப்படக் கூடாது என்பதில் உறுதியாக உள்ளோம். ஆபத்தான் பகுதிகளில் இருந்து மக்களை வெளியேற விடாமல் ஹமாஸ் தடுப்பது வேதனை அளிக்கிறது என இஸ்ரேல் ராணுவ அதிகாரி தெரிவித்துள்ளார்.
காசா முழுமையும் முற்றுகையிடப்பட்டுள்ள நிலையில் மக்களை எப்படி இடம் மாற்றுவது என ஐ.நா. பொதுச்செயலாளர் அண்டோனியோ குட்டரெஸ் கேள்வி எழுப்பியுள்ளார். காசாவில் பாதுகாப்பு வழித்தடங்களை அமைக்கவேண்டும், மக்களை கேடயங்களாகப் பயன்படுத்தக் கூடாது, அனைத்து பணயக் கைதிகளையும் உடனே விடுவிக்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இஸ்ரேலின் எச்சரிக்கையை தொடர்ந்து, வடக்கு காசாவில் இருந்து ஆயிரக்கணக்கானோர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி காசாவின் தெற்கு பகுதி மற்றும் எகிப்து எல்லைக்கு செல்லத் தொடங்கியுள்ளனர்.
எதிரிகள் செய்த கொடூரமான செயல்களை ஒருபோதும் மறக்கமாட்டோம், மன்னிக்க மாட்டோம் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல் நாட்டில் சிக்கித் தவித்த 235 இந்தியர்களுடன் இந்தியா புறப்பட்ட 2வது விமானம் இன்று காலை டெல்லி வந்தடைந்தது என வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.
இஸ்ரேல் சென்றுள்ள அமெரிக்க பாதுகாப்பு மந்திரி லாயிட் ஆஸ்டின், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவை சந்தித்தார். அப்போது, இஸ்ரேல் மக்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் வழங்க அமெரிக்கா தயாராக உள்ளது என தெரிவித்தார்.