காங்கோவில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் தாக்குதல்- 25 பேர் உயிரிழப்பு
- ஒரே வீட்டில் இருந்த 15 பேர் உயிருடன் எரித்து கொல்லப்பட்டனர்.
- கொலை வெறி தாக்குதல் அதிகாலை 4 மணியளவில் நடந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோவில் சமீப காலமாக பயங்கரவாத குழுக்கள், பொது மக்கள் மீது பல்வேறு தாக்குதல்களை நடத்தி வருகின்றன.
இந்தநிலையில் கிழக்கு காங்கோவில் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய ஒரு பயங்கரவாத குழு நடத்திய தாக்குதலில் 25 பேர் கொல்லப்பட்டனர்.
ஏ.டி.எப். எனப்படும் கூட்டணி ஜனநாயகப் படை நடத்திய இந்த தாக்குதலில், ஒரே வீட்டில் இருந்த 15 பேர் உயிருடன் எரித்து கொல்லப்பட்டனர்.
இடுரி மாகாணத்தின் இருமு பிரதேசத்தில் உள்ள அபாகுலு கிராமத்தில் 7 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். வேல்ஸ் வோன்குட்டு நிர்வாகப் பகுதியில் மேலும் 3 பேர் என மொத்தம் 25 பேர் கொடூரமாக கொல்லப்பட்டனர்.
இந்த கொலை வெறி தாக்குதல் அதிகாலை 4 மணியளவில் நடந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
உகாண்டாவிற்கும் காங்கோவிற்கும் இடையிலான எல்லைப் பகுதியில் செயல்படும் ஏ.டி.எப். ஆயுதக் குழு, பல பொதுமக்களை சுட்டுக் கொன்றுள்ளது.
உகாண்டா அதிபர் யோவேரி முசேவேனியின் ஆட்சிக்கு எதிரான கிளர்ச்சியில் இருந்து இந்தக் குழு வளர்ந்தது. ஆனால் உகாண்டாவின் ராணுவத் தாக்குதல்களுக்குப் பிறகு இவர்கள் காங்கோ நாட்டிற்குள் சென்று பதுங்கி கொண்டனர்.
கடந்த ஆண்டு ஜூலை மாதம், இக்குழு 100க்கும் மேற்பட்டவர்களைக் கொன்று தொடர் தாக்குதல்களை நடத்தியது. உகாண்டா மற்றும் காங்கோ நாட்டு ராணுவ படைகள் இந்தக் குழுவிற்கு எதிராக கூட்டு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.