பரஸ்பர வரியை 90 நாட்களுக்கு டிரம்ப் நிறுத்தி வைக்கிறாரா? - வெள்ளை மாளிகை விளக்கம்
- பிற நாடுகள் விதிக்கும் வரிகளுக்கு ஏற்ப பரஸ்பர வரியை விதிப்பதாக டிரம்ப் அறிவித்தார்.
- உலக பங்குச்சந்தைகளில் கடுமையான சரிவு ஏற்பட்டுள்ளது.
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கடந்த ஏப்ரல் 2-ம் தேதி அமெரிக்க பொருட்களுக்கு பிற நாடுகள் விதிக்கும் வரிகளுக்கு ஏற்ப பரஸ்பர வரியை விதிப்பதாக அறிவித்தார்.
அதன்படி, இந்திய பொருட்கள் மீது 26 சதவீதம் வரி விதிக்கப்படும் என டிரம்ப் அறிவித்துள்ளார். சீனாவின் இறக்குமதி பொருட்களுக்கு 34 சதவீதம் கூடுதல் வரி, வியட்நாமுக்கு 46 சதவீத கூடுதல் வரி விதிக்கப்படும் என அறிவித்தார். அதேபோன்று பல்வேறு நாடுகளுக்கும் வரிவிதிப்பையே டிரம்ப் அறிவித்தார்.
டிரம்ப் வரிவிதிப்புக்கு எதிராக உலக நாடுகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன. சீனா டிரம்ப் வரிவிதிப்புக்கு எதிர் வரிவிதிப்பு நடவடிக்கையாக அமெரிக்க பொருட்களுக்கு 34 சதவீத கூடுதல் வரி விதித்தது. டிரம்ப் தொடங்கியுள்ள வர்த்தக போரால் உலக பங்குச்சந்தைகளில் கடுமையான சரிவு ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தனது பரஸ்பர வரிவிதிப்பை 90 நாட்களுக்கு நிறுத்தி வைப்பது குறித்து பரிசீலித்து வருவதாக தகவல் வெளியானது.
இந்நிலையில், டிரம்ப் தனது பரஸ்பர வரிவிதிப்பை 90 நாட்களுக்கு நிறுத்தி வைப்பது குறித்து பரிசீலித்து வருவதாக வெளியான தகவல் போலியானது என்று என்று வெள்ளை மாளிகை விளக்கம் அளித்துள்ளது.