உலகம்

"வரிகளை முற்றிலும் குறைக்க முன்வந்த இந்தியா.." மிகவும் தாமதமாகிவிட்டது என டிரம்ப் கறார்

Published On 2025-09-02 04:15 IST   |   Update On 2025-09-02 04:15:00 IST
  • இந்தியாவுடன் அமெரிக்காவின் உறவு ஒருதலைப்பட்சமான பேரழிவு என டிரம்ப் வர்ணித்துள்ளார்.
  • நமக்கு அதிக அளவில் பொருட்களை விற்கிறார்கள், ஆனால் நாம் அவற்றை மிகக் குறைவாகவே விற்கிறோம்.

ரஷிய எண்ணெய்யை வாங்குவதன் மூலம் இந்தியா உக்ரைன் போருக்கு உதவி செய்வதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் குற்றம்சாட்டி வருகிறார்.

இதனால் ஏற்கனவே விதித்த 25 சதவீத வரியுடன் அபராதமாக 25 சதவீத கூடுதல் வரி விதித்து கடந்த மாதம் உத்தரவிட்டார். இதனால் இந்திய பொருட்கள் 50 சதவீத வரியை எதிர்கொள்கிறது.

இந்நிலையில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மீண்டும் ஒருமுறை இந்தியாவை குறிவைத்துள்ளார்.

அதாவது, இந்தியாவுடன் அமெரிக்காவின் உறவு ஒருதலைப்பட்சமான பேரழிவு என டிரம்ப் வர்ணித்துள்ளார்.

இதுதொடர்பாக பேசிய டிரம்ப், இந்தியா வேறு எந்த நாட்டையும் விட எங்களிடம் அதிகம் வரிகளை விதித்துள்ளது.

அவர்கள் (இந்தியா) நமக்கு அதிக அளவில் பொருட்களை விற்கிறார்கள், ஆனால் நாம் அவர்களுக்கு மிகக் குறைவாகவே விற்கிறோம்.

2024 இல் இந்தியா அமெரிக்காவில் இருந்து 41.5 பில்லியன் டாலர் அளவிற்கு பொருட்களை இறக்குமதி செய்துள்ளது. அதேவேளையில் அமெரிக்காவுக்கு 80 பில்லியன் அளவிற்கு ஏற்றுமதி செய்துள்ளது.

அதேவேளை இந்தியா தனது எண்ணெய் மற்றும் இராணுவப் உபகரணங்களை ரஷியாவிலிருந்து அதிகம் வாங்குகிறது. அமெரிக்காவிலிருந்து மிகக் குறைவாகவே வாங்குகிறது.

அவர்கள் (இந்தியா) இப்போது தங்கள் வரிகளை முற்றிலுமாக குறைக்க முன்வந்துள்ளனர். ஆனால் இப்போது மிகவும் தாமதமாகிவிட்டது. அவர்கள் பல ஆண்டுகளுக்கு முன்பே அவ்வாறு செய்திருக்க வேண்டும். இந்தியா நீண்ட காலத்திற்கு முன்பே வரிகளைக் குறைத்திருக்க வேண்டும்" என்று கூறினார்.  

சீனாவில் நேற்று நடத்த ஷாங்காய் ஒத்துழைப்பு உச்சிமாநாட்டில் அந்நாட்டு அதிபர் ஜி ஜின்பிங், ரஷிய அதிபர் புதின், பிரதமர் மோடி நெருக்கம் காட்டிய நிலையில் டிரம்ப்பின் கருத்து வந்துள்ளது. 

Tags:    

Similar News