உலகம்

இஸ்ரேல் வான் வெளி தாக்குதல்- 35 பாலஸ்தீனர்கள் பலி

Published On 2024-05-27 10:05 GMT   |   Update On 2024-05-27 10:05 GMT
  • போர் முடிவுக்கு வராமல் நீடித்து வருகிறது.
  • ஹமாஸ் படையினரிடம் சிக்கி தவிக்கும் பிணைக்கைதிகளை மீட்க இஸ்ரேல் நடவடிக்கை எடுத்து வருகிறது.

காசா:

பாலஸ்தீனத்தில் ஹமாஸ் அமைப்பினர் கட்டுப்பாட்டில் உள்ள காசா நகரம் மீது இஸ்ரேல் ராணுவத்தினர் கடந்த 8 மாதங்களாக கடும் தாக்குதல் நடத்தி வருகிறார்கள்.

இந்த சண்டையில் இதுவரை 36 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் இறந்து விட்டனர். காசா நகரமே மொத்தமாக உருக்குலைந்து போய் விட்டது. அப்பாவி மக்கள் உயிர் இழந்து வருவதால் போரை நிறுத்த பல நாடுகள் சமரச முயற்சிகள் மேற்கொண்டன. ஆனாலும் போர் முடிவுக்கு வராமல் நீடித்து வருகிறது.

இது வரை இஸ்ரேலுக்கு ஆதரவாக இருந்து வரும் அமெரிக்கா கூட உடனடியாக போரை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என கேட்டுக்கொண்டது.

ஹமாஸ் அமைப்பினரை ஒழிக்கும் வரை ஓய மாட்டோம் என இஸ்ரேல் தெரிவித்துள்ளது. ஹமாஸ் படையினரிடம் சிக்கி தவிக்கும் பிணைக்கைதிகளை மீட்க இஸ்ரேல் நடவடிக்கை எடுத்து வருகிறது.

இந்த சூழ்நிலையில் யாரும் எதிர்பார்க்காத வகையில் இஸ்ரேல் தலைநகர் டெல்அவிவ் நகரம் மீது ஹமாஸ் அமைப்பின் ஆயுத படை பிரிவினர் மிகப்பெரிய ஏவுகணை தாக்குதலை நடத்தியது. காசாவில் இருந்து இந்த ஏவுகணைகள் சரமாரியாக வீசப்பட்டன.

இதையடுத்து இஸ்ரேல் அந்த ஏவுகணைகளை இடைமறித்து அழித்ததாக தெரிவித்துள்ளது. ஆனாலும் சேத விவரம், உயிர் சேதம் குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை.

இதனால் கோபம் அடைந்த இஸ்ரேல் படையினர் ஹமாசுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் தெற்கு காசாவில் உள்ள ரபா நகரம் மீது அதிரடி வான்வெளி தாக்குதலில் ஈடுபட்டது.

போருக்கு பயந்து வடக்கு காசாவில் இருந்து வெளியேறிய ஆயிரக்கணக்கான பொதுமக்கள் ரபாவில் தஞ்சம் புகுந்துள்ளனர். அவர்கள் அங்குள்ள முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்த முகாம்கள் மீது தான் இஸ்ரேல் கடும் தாக்குதல் நடத்தியது.

இந்த சண்டையில் 35 பாலஸ்தீனர்கள் உயிர் இழந்தனர். இவர்களில் பெரும்பாலானோர் குழந்தைகள் மற்றும் பெண்கள் ஆவார்கள் என காசா சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. ஏராளமானவர்கள் படுகாயம் அடைந்தனர். இதில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இதனால் சாவு எண்ணிக்கை அதிகரிக்கலாம் என தெரிகிறது.

இந்த தாக்குதலுக்கு பாலஸ்தீன அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இதனால் காசாவில் மீண்டும் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. எற்கனவே ரபா எல்லையில் தஞ்சம் அடைந்துள்ளவர்கள் நிவாரண பொருட்கள் எதுவும் கிடைக்காததால் பசி, பட்டினியால் வாடி வருகின்றனர். தற்போது இஸ்ரேல் நடத்திய தாக்குதலால் பொதுமக்கள் நிலை குலைந்து போய் உள்ளனர்.

இதற்கிடையில் தெற்கு லெபனானில் உள்ள கிராமங்களில் இஸ்ரேல் படையினர் நடத்திய புதிய தாக்குலுக்கு 8 பேர் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

Tags:    

Similar News