ஆப்பிரிக்காவின் தென் பகுதியில் கனமழை மற்றும் வெள்ளத்தால் 100-க்கும் மேற்பட்டோர் பலி
- டிசம்பர் கடைசியில் இருந்து கனமழை பெய்துள்ளது.
- தென்ஆப்பிரிக்கா, ஜிம்பாப்வே, மொசாம்பிக் நாடுகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.
ஆப்பிரிக்கா கண்டத்தின் தென்பகுதி நாடுகளில் கடந்த மாதம் இறுதியில் இருந்து பெய்த கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். தென்ஆப்பிரிக்கா, மொசாம்பிக், ஜிம்பாப்வே போன்ற நாடுகள் கனமழையால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.
தென்ஆப்பிரிக்காவின் இரண்டு வடக்கு மாகாணங்களில் குறைந்தது 19 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சுற்றுலா பயணிகள் மற்றும் பணியாளர்கள் உள்ளிட்டோர் ஹெலிகாப்டர் மூலம் பாதிக்கப்பட்ட இடத்தில் இருந்து வெளியேற்றப்பட்டனர். தென்ஆப்பிரிக்காவில் ஒரு வாரத்திற்குள் 400 மி.மீ. மழை பெய்துள்ளது.
மொசாம்பிக் நாட்டில் மழை சீசனுக்கு மாறாக திடீரென கனமழை பெய்ததில் 103 பேர் உயிரிழந்துள்ளனர். மின்னல் தாக்கி, வெள்ளத்தில் மூழ்கி, கட்டிடங்கள் இடிந்ததில் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், மோசமான வானிலை மற்றும் காலரா மூலமாகவும் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது.
மொசாம்பிக் நாட்டின் மத்திய தெற்கு பிராந்தியங்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளன. இங்குள்ள 2 லட்சம் மக்கள் பாதிப்பை சந்தித்துள்ளனர். ஆயிரக்கணக்கான வீடுகள் சேதமடைந்துள்ளன. 10 ஆயிரம் மக்கள் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.
ஜிம்பாப்வேயில் 70 பேர் உயிரிழந்துள்ளனர். ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளனர்.
மடாகஸ்கரில் 11 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், மாலவி மற்றும் சாம்பியா நாடுகளும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன.