45 பாலஸ்தீனர்களின் உடல்களை ஒப்படைத்தது இஸ்ரேல்
- 2023 தாக்குதலின்போது உயிரிழந்தவர்கள் உடல்களை ஹமாஸ், இஸ்ரேலிடம் ஒப்படைத்து வருகிறது.
- ஹமாஸ் அனுப்பி வைக்கும் ஒரு உடலுக்கு, 15 பாலஸ்தீனர்களின் உடல்களை இஸ்ரேல் அனுப்பி வைக்கிறது.
இஸ்ரேல்- காசா (ஹமாஸ்) இடையே போர் நிறுத்தம் ஏற்பட்டுள்ளது. இதன் முதல் கட்டமாக பிணைக்கைதிகள் மற்றும் பிணைக்கைதிகள் உடல்களை ஹமாஸ் ஒப்படைக்க வேண்டும். அதேபோல் இஸ்ரேல் சிறையில் உள்ள பாலஸ்தீன கைதிகள் மற்றும் பாலஸ்தீனர்களின் உடல்களை இஸ்ரேல் ஒப்படைக்க வேண்டும்.
உயிரோடு இருந்த 20 பிணைக்கைதிகளை ஹமாஸ் விடுவித்தது. அதன்பின் 2023ஆம் ஆண்டு தாக்குதலில் உயிரிழந்த இஸ்ரேலியர்களின் உடல்களை ஒப்படைத்து வருகிறது.
அதனடிப்பையில் நேற்றிரவு 2023 அக்டோபர் 7ஆம் தேதி தாக்குதல் நடத்தப்பட்டபோது உயிரிழந்த 3 இஸ்ரேல் ராணுவ வீரர்களின் உடல்களை ஹமாஸ் ஒப்படைத்தது.
இதனைத் தொடர்ந்து 45 பாலஸ்தீனர்களின் உடல்களை இஸ்ரேல் ஒப்படைத்துள்ளது. இந்த உடல்கள் நாசர் மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.
போர் நிறுத்தம் ஏற்பட்ட கடந்த மாதம் அக்டோபர் 10ஆம் தேதியில் இருந்து, இதுவரை ஹமாஸ் 20 பிணைக்கைதிகளின் உடல்களை ஒப்படைத்துள்ளது. இன்னும் 8 உடல்களை ஒப்படைக்க வேண்டியுள்ளது.
சிலநாட்களுக்கு ஒருமுறை ஒன்று அல்லது இரண்டு உடல்களை ஹமாஸ் அனுப்பி வைக்கிறது. வேகமாக உடல்களை அனுப்பி வைக்க இஸ்ரேல் வலியுறுத்துகிறது. மேலும், சில உடல்கள் பிணைக்கைதிகள் உடல்கள் இல்லை எனக் கூறுகிறது. காசா முழுவதும் பேரழிவு ஏற்பட்டுள்ளதால், உடல்களை ஒப்படைக்கும் பணி சிக்கலாக உள்ளதாக ஹமாஸ் தெரிவித்துள்ளது.
ஹமாஸ் அனுப்பும் ஒவ்வொரு உடலுக்கும், இஸ்ரேல் 15 பாலஸ்தீனர்களின் உடல்களை அனுப்ப வேண்டும்.