உலகம்

இம்ரான் கான், பாதுகாப்பு துறை மந்திரி கவாஜா ஆசிப்

இம்ரான் கானின் கட்சிக்கு தடை விதிக்க பாகிஸ்தான் அரசு திட்டம்... பாதுகாப்புத் துறை மந்திரி பரபரப்பு தகவல்

Published On 2023-05-24 11:35 GMT   |   Update On 2023-05-24 11:50 GMT
  • இம்ரான் கான் கைது செய்யப்பட்டதையடுத்து அவரது ஆதரவாளர்கள் ராணுவ தளங்களை சேதப்படுத்தினர்.
  • ஆதரவாளர்கள் நடத்திய தாக்குதல்களை கண்டிக்க இம்ரான் கான் இன்னும் தயங்குவதாக மந்திரி கூறினார்.

இஸ்லாமாபாத்:

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சி மீது தடை விதிக்க அரசு திட்டமிட்டிருப்பதாக பாதுகாப்புத்துறை மந்திரி கவாஜா ஆசிப் கூறி உள்ளார்.

இம்ரான் கான் கடந்த 9ம் தேதி வழக்கு விசாரணைக்கு ஆஜராக வந்தபோது, அவரை துணை ராணுவ படையினர் அதிரடியாக கைது செய்து அழைத்துச் சென்றனர். இதையடுத்து அவரது ஆதரவாளர்கள் போராட்டம் நடத்தினர். இதில் வன்முறை வெடித்தது. லாகூர் படைப்பிரிவு கமாண்டர் அலுவலகம், மியான்வாலி விமானப்படை தளம் மற்றும் பைசலாபாத்தில் உள்ள ஐஎஸ்ஐ கட்டிடம் உட்பட பல ராணுவ தளங்களை அவரது கட்சியினர் சேதப்படுத்தினர். ராவல்பிண்டியில் உள்ள ராணுவ தலைமையகமும் தாக்கப்பட்டது. வன்முறை மோதலில் 10 பேர் பலியானதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், நாட்டின் பாதுகாப்புத்துறை மந்திரி கவாஜா ஆசிப், இஸ்லாமாபாத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, ராணுவம் மற்றும் பொது சொத்துக்கள் தனது ஆதரவாளர்கள் நடத்திய தாக்குதல்களை கண்டிக்க இம்ரான் கான் இன்னும் தயங்குவதாக கூறினார்.

'ராணுவ நிலைகளை தாக்கியதால் அவரது தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சியை (பிடிஐ) தடை செய்வது குறித்து அரசு பரிசீலனை செய்து வருகிறது. இது தொடர்பாக இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை. அந்த கட்சியை தடை செய்ய அரசு தீர்மானித்தால் இந்த தீர்மானம் பாராளுமன்றத்தின் ஒப்புதலுக்கு அனுப்பப்படும். இம்ரான் கான், ராணுவத்தை தனது எதிரியாக கருதுகிறார். அவரது முழு அரசியலும் ராணுவத்தின் ஆதரவுடன் நடந்ததால், இன்று திடீரென ராணுவத்திற்கு எதிரான நிலைப்பாடை எடுக்க முடிவு செய்துள்ளார்' என பாதுகாப்புத்துறை மந்திரி கவாஜா ஆசிப் குறிப்பிட்டுள்ளார்.

Tags:    

Similar News