உலகம்

மெக்சிகோவை புரட்டிப்போட்ட கனமழை: பலி எண்ணிக்கை 130 ஆக உயர்வு

Published On 2025-10-16 04:42 IST   |   Update On 2025-10-16 04:42:00 IST
  • மெக்சிகோவில் கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி ஒரே நாளில் 64 பேர் இறந்தனர்.
  • தொடர் மழையில் சிக்கி இதுவரை பலியானோர் எண்ணிக்கை 130 ஆக உயர்ந்தது.

மெக்சிகோ சிட்டி:

வட அமெரிக்க நாடான மெக்சிகோவை பசிபிக் பெருங்கடல் சூழ்ந்துள்ளது. கடந்த 12-ம் தேதி காற்றழுத்த தாழ்வுநிலை அங்கு உருவானது. இது புயலாக வலுப்பெற்றது.

மெக்சிகோவின் கடலோர மாகாணங்களான ஹிடால்கோ, புபேல்லா மற்றும் வெராக்ரூஸ் நகரை மையமாகக் கொண்டு இந்தப் புயல் தாக்கும் என கணிக்கப்பட்டது. அப்பகுதியில் கடந்த 4 நாளாக தொடர் மழை கொட்டி தீர்த்தது. இடி, மின்னலுடன் பெய்த கனமழையால் அங்குள்ள தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

இதனால் குடியிருப்பு பகுதிகளுக்குள் வெள்ளம் புகுந்தது. சூறைக்காற்றுடன் பெய்த கனமழையால் அங்குள்ள மின்கம்பங்கள், ராட்சத மரங்கள் ஆகியவை வேரோடு சாய்ந்தன. இதனால் மின்வினியோகம் தடைபட்டு பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை அடியோடு முடங்கியது. ஏற்கனவே ஹிடால்கோ மாகாணத்தில் கொட்டி தீர்த்த கனமழைக்கு 66 பேர் வரை உயிரிழந்திருந்தனர்.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு வெராக்ரூசின் போசா ரிகா பகுதியை கருமேகம் சூழ்ந்து கொண்டு கனமழை வெளுத்து வாங்கியது. இதில் ஆயிரக்கணக்கான வீடுகள், பள்ளி மற்றும் மருத்துவமனை கட்டிடங்கள் சேதமடைந்தன. கட்டிட இடிபாடு மற்றும் வெள்ளப் பெருக்கில் சிக்கி ஒரே நாளில் 64 பேர் பலியாகினர். இதனால் மெக்சிகோவில் கனமழைக்கு பலியானோர் எண்ணிக்கை 130 ஆக உயர்ந்தது. வெள்ளத்தில் சிக்கி மாயமான 60-க்கும் மேற்பட்டோரை தேடும் பணி நடக்கிறது.

Tags:    

Similar News