ஹார்வர்டு பல்கலை.யில் வெளிநாட்டினர் படிக்க தடை.. டிரம்ப் உத்தரவை தற்காலிகமாக நிறுத்திய நீதிமன்றம்
- சேர வேண்டிய 2.2 பில்லியன் டாலர் மானியங்களையும் 60 மில்லியன் டாலர் ஒப்பந்தங்களையும் டிரம்ப் நிறுத்தினார்.
- இந்த உத்தரவை எதிர்த்து ஹார்வர்டு பல்கலைக்கழகம் நீதிமன்றத்தை நாடியது.
அமெரிக்காவில் பிரபாலான ஹார்வர்டு பல்கலைக்கழகம் அதிபர் டிரம்ப் உடைய இரும்புக்கரத்துக்கு எதிராக செயல்படுவதால் தொடர்ந்து இன்னல்களுக்கு உள்ளாகி வருகிறது. 389 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த பல்கலைக்கழகம் உலக அளவில் பிரபலமான ஒன்றாக உள்ளது.
வளாகத்தில் நடக்கும் மாணவர் போராட்டங்களுக்குத் தடை விதிக்க வேண்டும் என்று டிரம்ப் பல்கலைக்கழகங்களைக் கோரியிருந்தார். ஆனால் ஹார்வர்டு பல்கலைக்கழகம் அதை ஏற்க மறுத்தது. எனவே அதற்கு சேர வேண்டிய 2.2 பில்லியன் டாலர் மானியங்களையும் 60 மில்லியன் டாலர் ஒப்பந்தங்களையும் டிரம்ப் தடாலடியாக நிறுத்தினார்.
இந்த சூழலில், வெளிநாட்டு மாணவர்களை பல்கலைக்கழகத்தில் சேர்ப்பதற்கு டிரம்ப் நிர்வாகம் தடை விதித்தது. பல்கலைக்கழகத்திற்கு எதிராக நடைபெறும் விசாரணையின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக உள்நாட்டு பாதுகாப்புத்துறை தெரிவித்தது.
ஹார்வார்டு பல்கலைக்கழகத்தில் வெளிநாட்டில் இருந்து ஆண்டுக்கு சுமார் 800 பேர் சேர்ந்து பயின்று வரும் நிலையில், டிரம்ப் அரசின் இந்த நடவடிக்கை பல்கலைக்கழகத்திற்கு நெருக்கடியாக அமைந்தது.
இந்த உத்தரவை எதிர்த்து ஹார்வர்டு பல்கலைக்கழகம் நீதிமன்றத்தை நாடியது. இந்த வழக்கை விசாரித்த மாவட்ட நீதிமன்றம் டிரம்பின் உத்தரவை தாற்காலிகமாக நிறுத்தி வைத்தது. இந்த உத்தரவு ஹார்வர்டில் படிக்கும் ஆயிரக்கணக்கான வெளிநாட்டு மாணவர்களுக்குத் தற்காலிக ஆறுதலை அளித்துள்ளது.