உலகம்

கொலம்பியாவில் பயங்கர நிலச்சரிவு - உயிரோடு மண்ணுக்குள் புதைந்த 25 பேர்

Published On 2025-06-26 08:59 IST   |   Update On 2025-06-26 08:59:00 IST
  • ஆற்றில் நீர்மட்டம் உயர்ந்ததால் கரையோரங்களில் உள்ள வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது.
  • மண்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களை மீட்கும் நடவடிக்கையில் அவர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்

பகோடா:

தென் அமெரிக்காவில் உள்ள இயற்கை எழில் கொஞ்சும் நாடு கொலம்பியா. உலகின் நுரையீரல் என அழைக்கப்படும் அமேசான் காடுகளின் 25 சதவீத பகுதி இந்த கொலம்பியாவில் அமைந்துள்ளது. மறுபுறம் அழகிய கடற்கரைகள், மலை பிரதேசங்கள் என எண்ணிலடங்காத இயற்கை அழகை கொலம்பியா தன்னகத்தே கொண்டுள்ளது. இதனால் இங்கு வெளிநாடுகளில் இருந்து ஏராளமானவர்கள் சுற்றுலா வந்து மலையேற்றம், படகு சவாரி, பாரா கிளைடிங், அலை சறுக்கு, வனவிலங்கு பார்வை சவாரி என அனுபவிப்பார்கள்.

இந்தநிலையில் அந்நாட்டின் பிரபல மலை பிரதேசமாக அன்டியோகிவாவில் கடந்த சில நாட்களாக கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. குறிப்பாக மலைசிகரமான பெல்லோவில் இடி, மின்னலுடன் அதிகனமழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. ஆற்றில் நீர்மட்டம் உயர்ந்ததால் கரையோரங்களில் உள்ள வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது. இந்தநிலையில் பெல்லோவில் பெய்துவரும் கனமழை காரணமாக அங்கு திடீர் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் மலை மீது கட்டப்பட்டிருந்த குடியிருப்பு கட்டுமானங்கள் உள்ளிட்டவை அடித்து செல்லப்பட்டன. இதுகுறித்து தகவலறிந்த பேரிடர் மீட்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

தொடர்ந்து மண்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களை மீட்கும் நடவடிக்கையில் அவர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலச்சரிவில் சிக்கி பெண்கள், குழந்தைகள் உள்பட 25 பேர் உயிரிழந்து உள்ளனர். மண்ணுக்குள் சிக்கி உயிரிழந்தவர்களில் 10 பேர் உடல்கள் இதுவரை மீட்கப்பட்டு உள்ளன. மேலும் மண்ணுக்குள் புதைந்து மாயமானவர்களின் உடல்களை மீட்கும் பணியில் மீட்புப்படையினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலச்சரிவில் பலர் மாயமாகி உள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது.

Tags:    

Similar News