உலகம்

டிட்வா புயலால் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு சீனா 10 லட்சம் டாலர் நிதியுதவி

Published On 2025-12-02 05:53 IST   |   Update On 2025-12-02 05:53:00 IST
  • உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 334 ஆக உயர்ந்துள்ளது.
  • இலங்கையிலுள்ள இந்தியர்கள் உதவி தேவைப்பட்டால் +94 773727832 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம்.

டிட்வா புயல் காரணமாக இலங்கையில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அங்குள்ள ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியதால் பல நகரங்கள் வெள்ளக்காடாக மாறின.

இதனைத்தொடர்ந்து அங்கு பயங்கர நிலச்சரிவும் ஏற்பட்டது. இந்த நிலச்சரிவால் ஏராளமான வீடுகள் இடிந்து தரைமட்டமாகின. மேலும் பலர் உயிருடன் மண்ணில் புதையுண்டனர். மீட்பு படையினர் மீட்பு பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

எனினும் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவில் சிக்கி இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 334 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 370 பேர் மாயமாகியுள்ளதால் உயிரிழந்தோர் எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.

ஆயிரக்கணக்கானோர் தங்கள் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர். கிட்டத்தட்ட ஒரு லட்சம் பேர் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

வெள்ளம் மற்றும் மண்சரிவு பாதிப்பால் ஏற்பட்ட சேதம் மற்றும் உயிரிழப்பால் இலங்கை அரசு அவசரநிலையை அறிவித்துள்ளது.

இந்நிலையில் டிட்வா புயலால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கைக்கு சீனா அவசரகால நிதியுதவியாக 10 லட்சம் டாலர் அளித்துள்ளது.

இதற்கிடையே இலங்கைக்கு இந்தியாவிலிருந்து 10 டன் நிவாரணப் பொருள்கள் அனுப்பி வைக்கப்பட்டன. இலங்கையுடன் மீட்புப்பணிகளில் இந்தியாவிலிருந்து அனுப்பப்பட்டுள்ள தேசிய பேரிடர் மீட்புப்படையும் இந்திய விமானப்படையும் ஈடுபட்டுள்ளன.

இலங்கையிலுள்ள இந்தியர்கள் உதவி தேவைப்பட்டால் +94 773727832 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம்.  

Tags:    

Similar News