டிரம்புடன் தொடர்ந்து பணியாற்ற தயாராக உள்ளேன் - சீன அதிபர் பேச்சு
- சீனா, அமெரிக்கா இடையே வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்று கூறப்படுகிறது.
- உலகின் 2 முன்னணி பொருளாதாரங்களுக்கு இடையே அவ்வப்போது உராய்வுகள் இருப்பது இயல்பு.
அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்றதில் இருந்து பிற நாடுகளுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில், சீன பொருட்களுக்கு எதிராக கூடுதல் வரி விதித்தார். இதனால் அமெரிக்கா- சீனா இடையே சலசலப்பு ஏற்பட்டு வந்தது.
இந்த நிலையில், தென்கொரியாவின் புசான் நகரில் அமெரிக்க அதிபர் டிரம்ப்- சீன அதிபர் ஜி ஜின்பிங் இடையே பேச்சுவார்த்தை தொடங்கியது. இந்த பேச்சுவார்த்தையில் பரஸ்பர வரி விதிப்புகள், அரிய வகை கனிம ஏற்றுமதிக்கான கட்டுப்பாடுகள் குறித்து ஆலோசிக்கப்படும் என்றும் சீனா, அமெரிக்கா இடையே வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்றும் கூறப்படுகிறது.
இதனிடையே டிரம்ப் உடனான சந்திப்பின் போது சீன அதிபர் ஜி ஜின்பிங் பேசுகையில், சீனாவும் அமெரிக்காவும் கூட்டாளிகளாகவும், நண்பர்களாகவும் இருக்க வேண்டும் என்று பலமுறை பொதுவெளியில் கூறியுள்ளேன்.
உலகின் 2 முன்னணி பொருளாதாரங்களுக்கு இடையே அவ்வப்போது உராய்வுகள் இருப்பது இயல்பு. இருப்பினும் இரு நாடுகளின் வளர்ச்சிக்கு ஒரு நல்ல சூழலை உருவாக்க டிரம்புடன் தொடர்ந்து பணியாற்ற தயாராக உள்ளேன் என்றார்.