உலகம்

சிறுமிகள் வன்கொடுமை: எப்ஸ்டீன் கோப்புகளை வெளியிடும் மசோதாவில் டிரம்ப் கையெழுத்து - மர்மங்கள் வெளிவருமா?

Published On 2025-11-20 21:02 IST   |   Update On 2025-11-20 21:02:00 IST
  • கோப்புகளை வெளியிடுவதை முதலில் எதிர்த்த டிரம்ப், பின்னர் தனது சொந்தக் கட்சியின் அரசியல் அழுத்தத்தால் மசோதாவில் கையெழுத்திட்டார்.
  • இந்த கோப்புகள் வெளியானால், பலரின் இமேஜ் அடியோடு சரிந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சிறுமிகளை கடத்தி பெரும் புள்ளிகளுக்கு சப்ளை செய்து வந்த பாலியல் குற்றவாளி ஜெஃப்ரி எப்ஸ்டீன் வழக்கின் கோப்புகளை வெளியிடுவதற்கான மசோதாவில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார்

பாலியல் குற்றவாளி ஜெஃப்ரி எப்ஸ்டீன் வழக்கின் கோப்புகளை வெளியிடுவதற்கான மசோதாவில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார். கோப்புகளை வெளியிடுவதை முதலில் எதிர்த்த டிரம்ப், பின்னர் தனது சொந்தக் கட்சியின் அரசியல் அழுத்தத்தால் மசோதாவில் கையெழுத்திட்டார்.

இதன் விளைவாக, எப்ஸ்டீன் தொடர்பான அனைத்து கோப்புகள் மற்றும் கடிதப் போக்குவரத்து, 2019 ஆம் ஆண்டு சிறையில் அவர் தற்கொலை செய்தது தொடர்பான விசாரணை தொடர்பான தகவல்கள் வெளியிடப்பட உள்ளது.

ஆரம்ப காலங்களில் ஜெஃப்ரி எப்ஸ்டீன் உடன் டிரம்ப் பார்ட்டிகளில் கலந்து கொண்ட புகைப்படங்கள் இணயத்தில் உலா வருகின்றன. டிரம்ப் பெயரும் எப்ஸ்டீன் கோப்புகளில் இடம்பெற்றுள்ளதாக விமர்சனம் எழுந்தது.

இந்நிலையில் "எங்கள் அற்புதமான வெற்றியிலிருந்து மக்களைத் திசைதிருப்ப எப்ஸ்டீன் வழக்கை ஜனநாயகக் கட்சியினர் பயன்படுத்தியுள்ளனர். இது குடியரசுக் கட்சியை விட அவர்களை அதிகம் பாதிக்கும்" என்று மசோதாவில் கையெழுத்திட்டது குறித்து டிரம்ப் கூறினார். இருப்பினும் டிரம்ப் அரசு கோப்புகளை ஏற்கனவே தணிக்கை செய்து வெளியிடுகிறது என்ற விமர்சனமும் எழுந்துள்ளது.

அதே நேரம் இந்த கோப்புகளில் டிரம்ப் பெயர் இடம்பெற்றுள்ளதாக உலக பணக்காரர் எலான் மஸ்க்  ஏற்கனவே எக்ஸ் பக்கத்தில் தெரிவித்து பின்னர் அந்த பதிவை நீக்கியதும் குறிப்பிடத்தக்கது. 

 யார் இந்த எப்ஸ்டீன்?

ஜெஃப்ரி எப்ஸ்டீன், அமெரிக்காவின் மிகவும் செல்வாக்கு மிக்க ஒரு நிதியாளர். பெரும் நிறுவனங்களுக்கு நிதி திரட்டித் தரும் பணியில் ஈடுபட்டு, பல பணக்காரர்களுடன் நெருங்கிய தொடர்புகளை வளர்த்துக் கொண்டார். ஆனால், அவரது ஆடம்பர வாழ்க்கை முறைக்கும், சமூக அந்தஸ்துக்கும் பின்னால், கிரிமினல் உலகமே இருந்தது.

2000-களின் முற்பகுதியிலிருந்து, எப்ஸ்டீன் மீது இளம் சிறுமிகளை பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியது, கடத்தியது போன்ற குற்றச்சாட்டுகள் எழுந்தன.

அவருக்குச் சொந்தமான 'லிட்டில் செயிண்ட் ஜேம்ஸ்' என்ற கரீபியன் தீவில், பல முக்கிய பிரமுகர்கள், அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள் ஆகியோரை அழைத்து வந்து, அங்கு பாலியல் ரீதியான வன்முறைகளில் ஈடுபட்டதாக வழக்குகள் பதிவாகின.

2008-ல் எப்ஸ்டீனுக்கு மிகக் குறுகிய காலம் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. பின்னர், 2019-ல் மேலும் கடுமையான பாலியல் கடத்தல் குற்றச்சாட்டுகளுடன் மீண்டும் அவர் கைது செய்யப்பட்டார்.

ஆனால், வழக்கு விசாரணைக்கு வருவதற்கு முன்பே, அதே ஆண்டு ஆகஸ்ட் மாதம் நியூயார்க் சிறையில் மர்மமான முறையில் இறந்துபோனார். அவரது மரணம் பெரும் சர்ச்சையைக் கிளப்பியது, அவர் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது கொல்லப்பட்டாரா என்பது இன்று வரை ஒரு கேள்விக் குறியாகவே உள்ளது.

'எப்ஸ்டீன் கோப்புகள்'

ஜெஃப்ரி எப்ஸ்டீனின் வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்கள், அவருடைய தொலைபேசி அழைப்பு பதிவுகள், விமானப் பயணப் பதிவுகள், நீதிமன்ற ஆவணங்கள், பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சாட்சிகளின் வாக்குமூலங்கள், அவருடன் தொடர்பு கொண்ட பிரபலங்களின் பட்டியல் ஆகியவை 'எப்ஸ்டீன் கோப்புகள்' என அழைக்கப்படுகின்றன.

இந்த கோப்புகளில் பல உயர்மட்ட அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள், பிரபல கலைஞர்கள் மற்றும் அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளதாக நீண்டகாலமாகவே சந்தேகங்கள் நிலவி வருகின்றன. இந்த கோப்புகள் வெளியானால், பலரின் இமேஜ் அடியோடு சரிந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

Tags:    

Similar News