நிஜ்ஜார் கொலை சதி பிரதமர் மோடிக்கு தெரியும் என செய்தி வெளியிட்ட நாளிதழ்: அடிப்படை ஆதாரமற்றது என கனடா உடனடியாக மறுப்பு
- இரு நாடுகளுக்கு இடையேயான உறவில் விரிசல் ஏற்படும் நிலை ஏற்பட்டது.
- சம்பவம் தொடர்பாக இந்த ஆண்டின் தொடக்கத்தில் 4 இந்தியர்களை கனடா அதிகாரிகள் கைது செய்தனர்.
இந்தியா - கனடா இடையிலான உறவில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய சீக்கிய பிரிவினைவாத தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலையில் இந்தியாவிற்கு தொடர்பு இருப்பதாக கனடாவில் வெளியாகும் செய்தித்தாளில் செய்திகள் வெளியாகின.
இதனை தொடர்ந்து நிஜ்ஜாரின் கொலையில் எந்தத் தொடர்பும் இல்லை என்று இந்தியா தொடர்ந்து மறுப்பு தெரிவித்தது. மேலும் அந்தக் குற்றச்சாட்டுகளை "அபத்தமானது" மற்றும் அரசியல் உள்நோக்கம் கொண்டது என்று நிராகரித்தது.
இதனால் இரு நாடுகளுக்கு இடையேயான உறவில் விரிசல் ஏற்படும் நிலை ஏற்பட்டது.
இந்த நிலையில், கனடாவை சேர்ந்த நாளிதழ் ஒன்று நிஜ்ஜார் கொலை தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் திட்டமிட்டார் எனவும் இந்திய பிரதமர் மோடி, வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆகியோருக்கு இதுதொடர்பாக தெரிவிக்கப்பட்டது என்றும் செய்தி வெளியிட்டு இருந்தது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த செய்தி அடிப்படை ஆதாரமற்றது என்றும் பிரதமர் மோடி ஈடுபட்டதற்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை என்று கனடா அரசாங்கம் உடனடியாக மறுப்பு தெரிவித்துள்ளது.
முன்னதாக கடந்த ஆண்டு ஜூன் மாதம் பிரிட்டிஷ் கொலம்பியாவில் உள்ள சர்ரேயில் உள்ள குருத்வாராவிற்கு வெளியே நிஜ்ஜார் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக இந்த ஆண்டின் தொடக்கத்தில் 4 இந்தியர்களை கனடா அதிகாரிகள் கைது செய்தனர்.