உலகம்

வர்த்தகப் போருக்கு மத்தியில் தேர்தல் நடத்த மும்முரம் காட்டும் கனடா பிரதமர் மார்க் கார்னி

Published On 2025-03-24 10:30 IST   |   Update On 2025-03-24 10:30:00 IST
  • பொருளாதார நிபுணர் மார்க் கார்னி பிரதமராக பதவி ஏற்றார்.
  • பாராளுமன்ற தேர்தலை முன்கூட்டியே நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது.

வட அமெரிக்க நாடான கனடாவின் பிரதமராக இருந்த ஜஸ்டின் ட்ரூடோவுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதால் அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து கடந்த 9-ந்தேதி ஆளும் லிபரல் கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட பொருளாதார நிபுணர் மார்க் கார்னி பிரதமராக பதவி ஏற்றார்.

இந்த நிலையில் கனடாவுக்கு எதிராக அமெரிக்காவின் நடவடிக்கைக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாராளுமன்ற தேர்தலை முன்கூட்டியே நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது.

அமெரிக்காவில் டொனால்டு டிரம்ப் புதிய அதிபராக பதவி ஏற்ற பிறகு கனடாவுக்கான அனைத்து உதவிகளும் நிறுத்தப்பட்டது. மேலும் கனடாவுக்கு அதிக வரி விதிக்கப்போவதாகவும், அமெரிக்காவின் 51-வது மாகாணமாக கனடா சேர்க்கப்படும் என்றும் டிரம்ப் மிரட்டல் விடுத்து வருகிறார்.

அதிபர் டிரம்பின் இந்த நியாயமற்ற வரிகளை எதிர்கொள்ள கனடாவில் அடுத்த மாதம் (ஏப்ரல்) 28ம் தேதி பாராளுமன்ற தேர்தல் நடத்த இருப்பதாக பிரதமர் மார்க் கார்னி தெரிவித்துள்ளார். நேற்று அவர் ஒட்டாவில் உள்ள ரிடோ ஹாலில் ஆளுநர் ஜெனரல் மேரி சைமனை சந்தித்தார். பாராளுமன்றத்தை கலைக்க அவர் பரிந்துரை செய்தார்.

கனடா பாராளுமன்றத்தின் பதவி காலம் வருகிற அக்டோபர் மாதம் 20-ந்தேதி வரை இருக்கிறது. ஆனால் மார்க் கார்னிக்கு கட்சிக்குள்ளும், பொதுமக்கள் மத்தியிலும் ஆதரவு பெருகி வருவதால் அவர் இந்த நடவடிக்கையை எடுத்து உள்ளார்.

இது குறித்து கவர்னர் ஜெனரலை சந்தித்த பிறகு பிரதமர் மார்க் கார்னி பேசும் போது, "கனடாவில் ஏப்ரல் மாதம் 28ம் தேதி தேர்தல் நடத்த கவர்னர் ஜெனரல் ஒப்புதல் அளித்து உள்ளார். அமெரிக்கா நம்மை சொந்தமாக்கி கொள்ள விரும்புகிறது.

டிரம்ப் நம்மை பிரிக்க நினைக்கிறார். அதை நடக்க நாங்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம். நாம் வலுவான பொருளாதாரத்தை உருவாக்க வேண்டும். அமெரிக்க அதிபர் டிரம்பின் வரிகளை சமாளிக்க வேண்டிய கட்டாயத்தில் கனடா உள்ளது. இது போன்ற முக்கியமான தருணங்களில் நாட்டை யார் வழி நடத்த வேண்டும் என்பதில் கனடா மக்கள் தெளிவாக இருக்கிறார்கள்," என்று அவர் கூறினார்.

Tags:    

Similar News