உலகம்

எங்கள் நாட்டின் உறவினர்களுடன் உள்ள காசா மக்களுக்கு தற்காலிக விசா: கனடா அறிவிப்பு

Published On 2023-12-22 03:02 GMT   |   Update On 2023-12-22 03:02 GMT
  • தொடரந்து சண்டை நடைபெற்று வருவதால் காசா மக்கள் அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் அவதி.
  • போர் நிறுத்தம் தேவை என உலக நாடுகள் வலியுறுத்திய போதிலும், அதற்கான முயற்சிகள் தோல்வி அடைந்து வருகின்றன.

ஹமாஸ் மீது போர் பிரகடனம் செய்து இஸ்ரேல் ராணுவம் காசா மீது தாக்குதல் நடத்தி வருகிறது. வடக்கு காசாவைத் தொடர்ந்து தெற்கு காசாவிலும் இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. வடக்கு காசா ஏறக்குறைய முற்றிலும் சிதைந்த நிலையில் காணப்படுகிறது. தெற்குப் பகுதியில் உள்ள கான் யூனிஸ் நகரில் பலத்த சண்டை நடைபெற்று வருகிறது.

இதனால் பாலஸ்தீன மக்கள் கடும் சோதனையை சந்தித்து வருகின்றனர். தங்குவதற்கு இடமில்லாமல், அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் அல்லாடி வருகின்றனர்.

இந்த நிலையில் கனடா நாட்டினரின் உறவினர்கள் காசா பகுதியில் இருந்து, எங்கள் நாட்டில் குடியேற தற்காலிக விசாக்களுக்கு விண்ணப்பிக்கலாம் என கனடா தெரிவித்துள்ளது. ஆனால், இஸ்ரேல் ராணுவத்தால் முற்றுகையிடப்பட்ட காசாவில் இருந்து வெளியேற நாங்கள் உத்தரவாதம் அளிக்க முடியாது எனத் தெரிவித்துள்ளது.

இந்த திட்டம் ஜனவரி 9-ந்தேதியில் இருந்து நடைமுறைக்கு வரும் என எதிர்பார்ப்பதாக அந்நாட்டின் குடிவரவு மந்திரி மார்க் மில்லர் தெரிவித்துள்ளார்.

தற்போது வரை 660 கனடா நாட்டைச் சேர்ந்தவர்கள், நிரந்தமாக வசித்து வருபவர்கள், அவர்களுடைய மனைவிகள் மற்றும் குழந்தைகளை காசாவில் இருந்து அழைத்து வர அரசு கவனம் செலுத்துகிறது எனவும் தெரிவித்துள்ளார்.

கனடா நாட்டைச் சேர்ந்தவர்களுடைய பெற்றோர்கள், குழந்தைகள், பேரக்குழந்கைள் போன்றோரின் தகுதியுள்ள விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படும். அவர்களுடைய விண்ணப்பங்கள் ஏற்புடையதாக இருந்தால் மூன்று வருடங்கள் விசா வழங்கப்படும்.

இதனால் எத்தனை பேர் கனடாவிற்கு வருவார்கள் எனத் தெரியாது. ஆனால் நூற்றுக்கணக்கில் இருக்க வாய்ப்புள்ளது. தற்போதைய நிலையில் கனடா நாட்டைச் சேர்ந்தவர்களை காசாவில் இருந்து வெளியேற்றுவது மிகவும் கடினமானது என்றார்.

அக்டோபர் மாதம் 7-ந்தேதி ஹமாஸ் பயங்கரவாதிகள் இஸ்ரேல் எல்லைக்குள் புகுந்து கொடூர தாக்குதல் நடத்தினர். இதில் 1200 பேர் கொல்லப்பட்டனர். மேலும் குழந்தைகள் முதல் முதியோர் வரை சுமார் 240 பேர் பிணைக்கைதிகளை விடித்துச் சென்றுள்ளனர். இதற்கு பதிலடியாக காசா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

ஏழு நாட்கள் போர் நிறுத்தம் ஏற்பட்டு பிடித்துச் செல்லப்பட்ட பிணைக்கைதிகளில் 100-க்கும் மேற்பட்டோர் விடுவிக்கப்பட்டுள்ளனர். சுமார் 127 பேர் இன்னும் மீட்கப்படாமல் உள்ளனர். 

Tags:    

Similar News