உலகம்

நைஜீரியாவில் இரு குழுவினருக்கு இடையிலான கடும் மோதலில் 113 பேர் பலி

Published On 2023-12-26 07:18 GMT   |   Update On 2023-12-26 07:18 GMT
  • கால்நடை வளர்ப்பவர்களுக்கும், விவசாயிகளுக்கும் இடையே நீண்ட நாட்களாக மோதல் போக்கு இருந்து வருகிறது.
  • சனிக்கிழமை முதல் நேற்று வரை நடந்த இடைவிடாத துப்பாக்கி சண்டையில் பலர் உயிரிழப்பு.

மத்திய நைஜீரியா நாட்டின் பிளாட்டு (Plateau) மாநிலத்தின் போக்கோஸ் பகுதியில் கால்நடை வளர்ப்பவர்களுக்கும், விவசாயிகளுக்கும் இடையே நீண்ட நாட்களாக மோதல் போக்கு இருந்து வருகிறது.

இந்த நிலையில் கடந்த சனிக்கிழமை இந்த இரு பிரிவினருக்கும் இடையே பயங்கர மோதல் வெடித்தது. நூற்றுக்கணகானவர்கள் ஒன்று திரண்டு ஒருவருக்கொருவர் ஆயுதங்களால் தாக்கிக்கொண்டனர். மேலும் துப்பாக்கியாலும் சுட்டனர்.

போக்கோஸ் பகுதியில் தொடங்கிய இந்த சண்டை பக்கத்து மாநிலமாக பார்கின்வாடி வரை பரவியது. இந்த மோதலில் முதலில் 16 பேர் மட்டுமே இறந்ததாக நேற்று முன்தினம் அந்நாட்டு ராணுவம் தெரிவித்தது. ஆனால் சனிக்கிழமை முதல் நேற்று வரை நடந்த இடைவிடாத துப்பாக்கி சண்டையில் இதுவரை 113 அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் 300-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இதில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இதனால் சாவு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.

நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர அப்பகுதியில் ராணுவம் குவிக்கப்பட்டு உள்ளது. இந்த தாக்குதல் காட்டு மிராண்டித்தனமானது. மிருகத்தனமானது. நியாயமற்றது என அம்மாநில கவர்னர் காலேப் முல்ட்வாஸ் தெரிவித்துள்ளார். அப்பாவி பொதுமக்களுக்கு எதிரான தாக்குதல்களை தடுக்க அரசு நடவடிக்கை .எடுக்கும் என கவர்னரின் செய்தி தொடர்பாளர் கியாங் லரே தெரிவித்துள்ளார். 

Similar News