உலகம்

காசாவில் தாக்குதல்: ஒரே நாளில் 62 பேரை கொன்ற இஸ்ரேல் படைகள்

Published On 2025-06-28 07:39 IST   |   Update On 2025-06-28 07:39:00 IST
  • இதில் 10 பேர் உதவி விநியோக மையத்தில் உணவுக்காக காத்திருந்தவர்கள்
  • இஸ்ரேலிய தாக்குதல்களில் இதுவரை சுமார் 56,331 பாலஸ்தீன மக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

காசாவின் பல்வேறு பகுதிகளில் நேற்று (வெள்ளிக்கிழமை) இஸ்ரேலிய தாக்குதல்களில் குறைந்தது 62 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர். இதில் 10 பேர் உதவி விநியோக நிலையத்தில் உணவுக்காக காத்திருந்தவர்கள் என்று காசா சுகாதாரத் துறையை தெரிவித்தது.

மேலும் மத்திய காசா நகரமான டெய்ர் அல்-பாலாவில் உள்ள உணவு விநியோக மையத்தில் இஸ்ரேல் குறிவைத்து நடத்திய தாக்குதலில் 18 பேர் கொல்லப்பட்டதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.

டெய்ர் அல்-பாலாவின் வடக்குப் பகுதியில் உள்ள ஒரு கிடங்கில் இருந்து கோதுமை மாவு மூட்டைகளைப் பெற வந்த பொதுமக்கள் மீதும் தாக்குதல் அரங்கேறி உள்ளது.

2023 அக்டோபர் 7 ஆம் தேதி முதல் காசா மீதான இஸ்ரேலிய தாக்குதல்களில் குறைந்தது 56,331 பாலஸ்தீன மக்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும், 132,632 பேர் காயமடைந்துள்ளதாகவும் காசா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

இதற்கிடையே காசாவில் மனிதாபிமான உதவி கோரி வந்த பாலஸ்தீனியர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்த இஸ்ரேலிய இராணுவத் தளபதிகள் உத்தரவிட்டதாக வெளியான செய்தியை இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு மறுத்துள்ளார். 

Tags:    

Similar News