உலகம்

மெக்சிகோவில் தேர்தல் பிரசார மேடை சரிந்து 9 பேர் பலி

Published On 2024-05-24 03:33 GMT   |   Update On 2024-05-24 08:58 GMT
  • மீட்பு படையினர் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
  • விபத்தில் பலியானவர்களுக்கு அதிபர் ஆண்ட்ரெஸ் மானுவல் லோபஸ் ஒபரடார் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.

மெக்சிகோ சிட்டி:

வட அமெரிக்க நாடான மெக்சிகோவில் அடுத்த மாதம் (ஜூன்) 2-ந்தேதி பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. இன்னும் சில நாட்களே உள்ளதால் அங்கு தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. அதன் ஒருபகுதியாக அங்குள்ள அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.

அதன்படி நியூவோ லியோன் மாகாணம் சான் பெட்ரோ கார்சா கார்சியா நகரில் மக்கள் இயக்க கட்சி சார்பில் தேர்தல் பிரசாரம் நடைபெற்றது. இதில் பெண்கள், குழந்தைகள் உள்பட நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.

அப்போது அந்த கட்சியின் அதிபர் வேட்பாளர் ஜார்ஜ் அல்வாரெஸ் மேனெஸ் ஆதரவாளர்கள் மத்தியில் உரையாற்றினார். இந்தநிலையில் அங்கு திடீரென பலத்த சூறாவளி காற்று வீசியது.

இதன் காரணமாக அந்த பிரசார மேடையின் ஒரு பகுதி சரிந்து விழுந்தது. இதனையடுத்து அங்கிருந்தவர்கள் பயத்தில் அலறியடித்துக்கொண்டு ஓட்டம் பிடித்தனர்.

இந்த விபத்தில் சிக்கி ஒரு குழந்தை உள்பட 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 50-க்கும் மேற்பட்டோருக்கு படுகாயம் ஏற்பட்டது. மீட்பு படையினர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த விபத்தில் பலியானவர்களுக்கு அதிபர் ஆண்ட்ரெஸ் மானுவல் லோபஸ் ஒபரடார் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். இதற்கிடையே பலத்த காற்றால் மேடை சரிந்து விழும் காட்சிகள் அங்குள்ள சமூகவலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.


Tags:    

Similar News