உலகம்

விவேக்கிற்கு பிறகு டி சான்டிஸ்... டிரம்பிற்கு போட்டி நிக்கி மட்டுமே

Published On 2024-01-22 07:01 GMT   |   Update On 2024-01-22 07:01 GMT
  • டிரம்ப் மீது பல வழக்குகள் உள்ளதால் அவர் போட்டியிடுவதில் சிக்கல் வரலாம்
  • டிரம்புடன் எனக்கு கருத்து வேறுபாடுகள் உண்டு என்றார் ரான் டி சான்டிஸ்

இவ்வருட இறுதியில் அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது.

ஜனநாயாக கட்சியை சேர்ந்த தற்போதைய அதிபர் ஜோ பைடன் மீண்டும் போட்டியிடும் நிலையில், அவரை எதிர்த்து குடியரசு கட்சியை சேர்ந்த முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் களம் இறங்கி உள்ளார்.

டொனால்ட் டிரம்ப் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன. வழக்குகளின் தீர்ப்புகளின் காரணமாக அவர் தேர்தலில் போட்டியிட தடை விதிக்கப்படலாம் என ஒரு கருத்து நிலவுகிறது.

டொனால்ட் டிரம்பை தவிர தென் கரோலினா மாநில கவர்னர் நிக்கி ஹாலே (Nikki Haley) மற்றும் புளோரிடா கவர்னர் ரான் டி சான்டிஸ் (Ron DeSantis) ஆகியோர் குடியரசு கட்சி சார்பில் களம் இறங்க ஆதரவு சேகரித்து வருகின்றனர்.

பிரதிநிதித்துவ தேர்தல் முறை கடைபிடிக்கப்படும் அமெரிக்காவில், வேட்பாளர்கள் தங்கள் கட்சிக்குள்ளேயே முதலில் ஆதரவு இருப்பதை நிலைநாட்ட வேண்டும்.

இதுவரை டொனால்ட் டிரம்பிற்கு சிறப்பான ஆதரவு இருந்து வருகிறது.

ரான் டி சான்டிஸ் தீவிரமாக பிரசாரம் செய்து வந்தும் அவருக்கு ஆதரவு கிடைக்கவில்லை.


இதை தொடர்ந்து ரான் போட்டியிலிருந்து விலகினார்.

இது குறித்து பேசிய ரான், "போட்டியிலிருந்து விலகுகிறேன். எனக்கு ஆதரவு கோரிய பிரசாரத்தையும் நிறுத்தி கொள்கிறேன். குடியரசு கட்சி வாக்காளர்கள் மீண்டும் டொனால்ட் டிரம்ப் அதிபராவதையே விரும்புகிறார்கள் என்பது தெளிவாக தெரிகிறது. எனக்கும் டிரம்பிற்கும் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், தற்போதைய அதிபர் ஜோ பைடனை விட பன்மடங்கு திறமையும், தகுதியும் உள்ளவர். அவருக்கு என் ஆதரவை முழுமையாக அளிக்கிறேன்" என தெரிவித்தார்.

சில தினங்களுக்கு முன், குடியரசு கட்சியின் சார்பில் போட்டியிட ஆதரவு கோரி வந்த இந்திய வம்சாவளியை சேர்ந்த தொழிலதிபர் விவேக் ராமஸ்வாமி, போட்டியிலிருந்து விலகியது குறிப்பிடத்தக்கது. 


தற்போதைய நிலவரப்படி டொனால்ட் டிரம்பிற்கு அக்கட்சியில் நிக்கி ஹாலே மட்டுமே போட்டியாளராக உள்ளார்.

Tags:    

Similar News