உலகம்

7 ஆண்டுகளுக்கு பிறகு சவுதி அரேபியாவில் மீண்டும் ஈரான் தூதரகம் இன்று திறப்பு

Published On 2023-06-06 04:49 GMT   |   Update On 2023-06-06 06:46 GMT
  • திறப்பு விழாவில் இருநாட்டு வெளியுறவுத் துறை அதிகாரிகள், தூதர்கள் கலந்து கொள்கிறார்கள்.
  • மோதலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் தூதரகங்களை திறக்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது.

ரியாத்:

வளைகுடா நாடுகளான சவுதி அரேபியா-ஈரான் இடையே மோதல் போக்கு நிலவி வந்தது.

கடந்த 2016-ம் ஆண்டு ஷினயட் மதகுரு நிம்ர்-அல் நிம்ரை, சவுதி அரேபியா தூக்கிலிட்டதற்கு எதிராக ஈரானில் போராட்டங்கள் நடந்தது.

தலைநகர் தெக்ரான் மற்றும் வடமேற்கு நகரமான மஷாத்தில் உள்ள தூதரகங்கள் தாக்கப்பட்டன. இதையடுத்து ஈரானுடனான உறவை சவுதி அரேபியா துண்டித்தது. இதனால் சவுதி அரேபியாவில் செயல்பட்டு வந்த தங்கள் நாட்டு தூதரகத்தை ஈரான் மூடியது. மேலும் ஏமன் உள்நாட்டு போரில் இரு நாடுகள் இடையே மோதல் அதிகரித்தது.

இதற்கிடையே சவுதி அரேபியா-ஈரான் இடையேயான உறவை மேம்படுத்த சீனா முயற்சி செய்தது. இதன் பயனாக கடந்த மார்ச் 10-ந்தேதி சவுதி அரேபியா-ஈரான் இடையே அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது. இரு நாடுகளும் தங்கள் தூதரகங்களை திறக்க 2 மாதம் அவகாசம் வழங்கப்பட்டது.

இந்நிலையில் 7 ஆண்டுகளுக்கு பிறகு சவுதி அரேபியாவில் ஈரான் தனது தூதரகத்தை இன்று திறக்கிறது. திறப்பு விழாவில் இருநாட்டு வெளியுறவுத் துறை அதிகாரிகள், தூதர்கள் கலந்து கொள்கிறார்கள்.

ஈரானில், சவுதி அரேபியா தனது தூதரகத்தை மீண்டும் திறப்பது அல்லது தூதரை தேர்ந்தெடுப்பது குறித்து இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.

சவுதி அரேபியா, ஈரான் நாடுகள் தங்களது மோதலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் உறவை வலுப்படுத்த தூதரகங்களை திறக்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ளதால் மத்திய கிழக்கு நாடுகளில் பதற்றம் தணியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

Similar News