உலகம்

178 ஆண்டுகளுக்கு பிறகு மகாளய அமாவாசை தினத்தில் சூரிய கிரகணம்

Published On 2023-10-14 05:59 GMT   |   Update On 2023-10-14 07:16 GMT
  • பூமியை பொறுத்தவரை ஓர் ஆண்டில் 2 முதல் 5 சூரிய கிரகணங்கள் நிகழக்கூடும்.
  • அமெரிக்காவின் வானிலை ஆராய்ச்சி நிறுவனமான நாசாவின் இணைய தள பக்கத்தில் சூரிய கிரகணம் நேரலையாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

வாஷிங்டன்:

சூரியன், சந்திரன், பூமி ஆகிய மூன்றும் ஒரே நேர் கோட்டில் வரும் போது கிரகணம் ஏற்படுகிறது. பூமிக்கும் சூரியனுக்கும் இடையில் சந்திரன் கடந்து செல்லும் போது சூரிய கிரகணம் ஏற்படுகிறது. இந்த சமயத்தில் சூரியனின் ஒளியை சந்திரன் மறைக்கும். பூமியை பொறுத்தவரை ஓர் ஆண்டில் 2 முதல் 5 சூரிய கிரகணங்கள் நிகழக்கூடும்.

இந்நிலையில் இந்த ஆண்டின் கடைசி சூரிய கிரகணம் இன்று நடைபெற உள்ளது. 178 ஆண்டுகளுக்கு பிறகு மகாளய அமாவாசை தினத்தில் இந்த அரிய கிரகணம் நிகழ்கிறது.

இந்திய நேரப்படி இரவு 8.34 மணிக்கு தொடங்கி நள்ளிரவு 2.25 மணி வரை சூரிய கிரகணம் நடக்க உள்ளது. இரவு நேரம் என்பதால் இந்தியாவில் இந்த சூரிய கிரகணம் தெரியாது.

இந்த சூரிய கிரகணம் அமெரிக்காவில் நன்றாக தெரியும் என்றும் நெருப்பு வளையம் போல காட்சி அளிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நெருப்பு வளைய சூரிய கிரகணம் நிலவு பூமியில் இருந்து வழக்கத்தை விட சற்று தொலைவில் இருக்கும் போது நிகழ்கிறது. இது சூரியனை முழுமையாக மறைக்காது. அதற்கு பதிலாக ஒரு மெல்லிய நெருப்பு வளையம் போல் தெரியும்.

அமெரிக்காவின் வானிலை ஆராய்ச்சி நிறுவனமான நாசாவின் இணைய தள பக்கத்தில் சூரிய கிரகணம் நேரலையாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

பித்ரு அமாவாசை எனப்படும் மகாளய அமாவாசை தினத்தில் கிரகணம் ஏற்படுவது சிறப்பானதாக பார்க்கப்படுகிறது. ஜோதிட சாஸ்திரத்தின் படி, 178 ஆண்டுகளுக்கு பிறகு மகாளய அமாவாசை தினத்தில் இந்த அரிய கிரகணம் ஏற்படுவதால் இந்த நாளில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது நல்லது. பல ஆண்டுகாலத்திற்கு புண்ணியத்தையும் முன்னோர்களின் ஆசியையும் கொடுக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

இதையடுத்து வருகிற 28-ந்தேதி பவுர்ணமி நாளில் சந்திர கிரகணமும் ஏற்பட உள்ளது. இந்த சந்திர கிரகணத்தை இந்தியாவில் பார்க்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 28- ந்தேதி ஏற்படும் சந்திர கிரகணம் இந்திய நேரப்படி இரவு 11.31 மணிக்கு தொடங்கி மறுநாள் 29- ந்தேதி அதிகாலை 3.56 மணி வரை நீடிக்க உள்ளது. இதன் காரணமாக சந்திர கிரகணத்தை இந்தியாவில் மிகவும் தெளிவாக வெறும் கண்ணால் பார்க்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News