உலகம்

துருக்கியை துயரத்தில் ஆழ்த்திய நிலநடுக்கம்... சமூக வலைத்தளத்தில் பீதியை பரப்பிய 4 பேர் கைது

Published On 2023-02-07 18:40 IST   |   Update On 2023-02-07 19:15:00 IST
  • மீட்பு பணிகள் தொடர்பாக சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து செய்திகள் வெளியான வண்ணம் உள்ளன.
  • உதவி கேட்பவர்களின் இருப்பிடத்தை உடனடியாக அறிந்து உதவி செய்யப்படுவதாக போலீசார் கூறுகின்றனர்.

இஸ்தான்புல்:

துருக்கி- சிரியா எல்லையை ஒட்டிய பகுதியில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுங்கங்களால் ஏராளமான கட்டிடங்கள் இடிந்து விழுந்துள்ளன. இடிபாடுகளில் சிக்கியவர்களின் உடல்கள் கொத்துக் கொத்தாக மீட்கப்படுகின்றன. எங்கு பார்த்தாலும் மரண ஓலம் கேட்கிறது. இன்று மாலை நிலவரப்படி மீட்கப்பட்ட சடலங்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்தை தாண்டி உள்ளது. ஆயிரக்கணக்கானோர் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர். மேலும் ஏராளமான மக்கள் இடிபாடுகளில் சிக்கியிருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் அபாயம் உள்ளது.

நிலநடுக்க பாதிப்புகள் மற்றும் மீட்பு பணிகள் தொடர்பாக சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து செய்திகள் வெளியான வண்ணம் உள்ளன. சிலர் அச்சமூட்டும் வகையில் கருத்துக்களையும் பதிவிட்டவண்ணம் உள்ளனர். குறிப்பாக, அதிக பாதிப்பை சந்தித்துள்ள துருக்கியின் ஹடே நகரில், மீட்பு பணிகள் சரியில்லை என புகார் தெரிவித்து பலர் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளனர்.

இவ்வாறு தேவையற்ற அச்சம் மற்றும் பீதியை கிளப்பும் வகையில் சமூக வலைத்தளத்தில் பதிவிட்ட 4 பேரை அதிகாரிகள் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

மக்கள் மத்தியில் அச்சத்தையும் பீதியையும் உருவாக்கும் நோக்கில் பதிவுகளை பகிர்ந்துள்ள கணக்குகளை அதிகாரிகள் கண்டறிந்த பின்னர், நான்கு நபர்களிடமும் விசாரணை நடத்தப்படுவதாக

போலீசார் தெரிவித்தனர். ஆனால் அந்த பதிவுகள் குறித்த எந்த தகவலையும் காவல்துறை வெளியிடவில்லை.

உதவி கேட்டு சமூக வலைத்தளங்களில் தகவல்களை பகிரும் மக்களின் முகவரி மற்றும் இருப்பிடத் தகவல் உடனடியாகக் கண்டறியப்பட்டு, உதவிகளை செய்வதற்காக ஒருங்கிணைப்பு ஏற்படுத்தப்பட்டிருப்பதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News