உலகம்
உலக வங்கி

நிதி உதவி வழங்க இலங்கைக்கு உலக வங்கி நிபந்தனை

Published On 2022-05-25 10:01 GMT   |   Update On 2022-05-25 10:01 GMT
போதுமான பெரிய பொருளாதாரக் கொள்கை கட்டமைப்பை உருவாக்கும் வரை, இலங்கைக்கு புதிய நிதியுதவியை வழங்க உலக வங்கி திட்டமிடவில்லை.
கொழும்பு:

இலங்கை, பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது. அங்கு பெட்ரோல், டீசல், அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது.

எரிபொருள் இறக்குமதி செய்வதற்கு அன்னிய செலாவணி கையிருப்பு இல்லாததால் இலங்கை அரசு திணறுகிறது. இந்தியா, உலக வங்கி ஆகியவை கடனுதவி அளித்த நிலையில் அந்த நிதிகள் தீர்ந்து உள்ளதால் இலங்கையில் மீண்டும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து இந்தியா, உலக வங்கியிடம் இலங்கை அரசு மீண்டும் நிதியுதவி கேட்டுள்ளது.

இந்த நிலையில் நிதியுதவி வழங்க இலங்கைக்கு உலக வங்கி நிபந்தனை விதித்துள்ளது. இது தொடர்பாக உலக வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

இலங்கைக்கு ஒரு கடன் திட்டம் அல்லது புதிய கடன் உறுதிப்பாடுகளை முன்னெடுக்க உலக வங்கி திட்டமிட்டுள்ளதாக பல தவறான தகவல் வெளியாகியுள்ளன.

“இலங்கை மக்கள் மீது நாங்கள் அக்கறை கொண்டுள்ளோம். பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் பரந்த அடிப்படையிலான வளர்ச்சியை மீட்டெடுப்பதற்கான பொருத்தமான கொள்கைகளுக்கு ஆலோசனை வழங்குவோம். அதற்காக சர்வதேச நாணய நிதியம் மற்றும் பிற அபிவிருத்தி பங்காளிகளுடன் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகிறோம்.

போதுமான பெரிய பொருளாதாரக் கொள்கை கட்டமைப்பை உருவாக்கும் வரை, இலங்கைக்கு புதிய நிதியுதவியை வழங்க உலக வங்கி திட்டமிடவில்லை.

சில அத்தியாவசிய மருந்துகள், வருமானமற்ற மற்றும் பாதிக்கப்படக்கூடிய குடும்பங்களுக்கு தற்காலிக பணப்பரிமாற்றம் உதவி, பாதிக்கப்படக்கூடிய குடும்பங்களின் பிள்ளைகளின் பாடசாலை தேவைகள், உணவு, விவசாயிகள் மற்றும் சிறு வணிகங்களுக்கு ஆதரவாக போன்ற விஷயங்களில் அரசாங்கத்திற்கு உதவுவதற்கு முன்னர் அங்கீகரிக்கப்பட்ட திட்டங்களின் வளங்களை நாங்கள் தற்போது மீண்டும் உருவாக்குகிறோம் என்று தெரிவித்துள்ளது.

இலங்கை மத்திய வங்கி கவர்னர் நந்தலால் வீரசிங்க கூறும்போது, “வெளிநாட்டு கடனை மறுசீரமைப்பு செய்வது தொடர்பாக சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தையை அடுத்த 6 முதல் 7 மாதங்களுக்குள் நிறைவு செய்ய முடியும் என்று நம்பிக்கை உள்ளது.



அந்நிய செலாவணியை செலவழிப்பதை விட அந்நிய செலாவணியை ஈட்டும் நாடாக இலங்கையை மாற்றுவதே தற்போதைய நெருக்கடிக்கு நீண்ட கால தீர்வாகும்.

இதன்படி இலங்கையின் அந்நிய செலாவணி ஈட்டும் திறனை நடுத்தர மற்றும் நீண்ட கால அளவில் மேம்படுத்த வேண்டும்.

அப்படி இல்லாவிட்டால் இலங்கையின் தற்போதைய நெருக்கடி தொடரும்.

தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி காரணமாக வெளிநாட்டு கடன்களை திருப்பி செலுத்துவதில் பெரிய சிரமம் ஏற்பட்டுள்ளது என்றார்.

Tags:    

Similar News