உலகம்
இலங்கை போராட்டம், அலி சப்ரி

பொருளாதார நெருக்கடி இன்னும் 2 ஆண்டுகளுக்கு நீடிக்கும்- இலங்கை அரசு ஒப்புதல்

Update: 2022-05-04 20:01 GMT
இலங்கை அரசு பதவி விலக கோரி,மீண்டும் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக இலங்கை தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.
கொழும்பு:

இலங்கையில் நிலவும் கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு பொறுப்பு ஏற்று அதிபர் பதவியில் இருந்து கோத்தபய ராஜ பக்சேவும், பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்சேவும் விலக வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் மற்றும் பொதுமக்கள் கடந்த ஒரு மாதமாக  தீவிர போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

இந்நிலையில், பொருளாதார நெருக்கடி குறித்து இலங்கை பாராளுமன்றத்தில் உரையாற்றிய அந்நாட்டு நிதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளதாவது:

இலங்கை  முன்னேப்போதும் இல்லாத பொருளாதார நெருக்கடிகளை குறைந்தது இன்னும் இரண்டு ஆண்டுகளுக்கு தாங்க வேண்டியிருக்கும்.

இரண்டு ஆண்டுகளில் இந்த நெருக்கடியை எங்களால் தீர்க்க முடியாது, ஆனால் இன்று நாம் எடுக்கும் நடவடிக்கைகள் இந்த பிரச்சனை எவ்வளவு காலம் நீடிக்கும் என்பதை தீர்மானிக்கும்.

இலங்கையின் இறக்குமதியை சார்ந்து பொருளாதாரத்தை நிலை நிறுத்துவதற்கும் அத்தியாவசிய பொருட்களுக்கு நிதியளிப்பதற்கும் தேவையான அந்நிய செலாவணி கையிருப்பு தற்போது 50 மில்லியன் டாலர்களுக்கு குறைவாகவே நாட்டில் உள்ளது.

மக்கள் உண்மையை அறிய வேண்டும். நிலைமையின் தீவிரத்தை மக்கள் உணர்ந்து கொள்கிறார்களா என்று எனக்குத் தெரியவில்லை.

சர்வதேச நாணய நிதியத்தை அணுகுவதை தாமதப்படுத்தியதன் மூலம் அரசு தவறிழைத்துள்ளது. சர்வதேச நாணய நிதியத்துடன் தற்போது பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

ஆனால் இலங்கையின் மத்திய வங்கித் தலைவர், கடன் வழங்குநரிடமிருந்து எந்த உதவியும் பெற இன்னும் சில மாதங்கள் ஆகும்.  

2019 இல் வரிகளை கடுமையாகக் குறைத்தது ஒரு வரலாற்றுத் தவறு. அரசு விரைவில் புதிய பட்ஜெட்டை வெளியிட்டு வருவாயை அதிகரிக்க வரிகளை உயர்த்தும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இந்நிலையில் கடந்த வாரம் வேலைநிறுத்தம் நடத்திய இலங்கை தொழிற்சங்கங்கள், இலங்கை அரசு முழுமையாக ராஜினாமா செய்ய வலியுறுத்தி வரும் வெள்ளிக்கிழமை மீண்டும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளன.


Tags:    

Similar News